TamilsGuide

பாரிஸ் வீதிகளில் பத்திரிகை விற்ற பாக்.குடியேறிக்கு அரசு உயர் விருது 

பாரிஸ் தெருக்களில் கால்நடையாகத் திரிந்து செய்தித் தாள்களை விற்றுவந்த அலி அக்பருக்கு நாட்டின் அதிபர் எமானுவல் மக்ரோனிடம் இருந்து ஒரு கடிதம் கிடைத்திருக்கிறது.
நாட்டில் தேசிய தரநிலையில் வைக்கப்படுபவர்களுக்கான செவாலியர் விருதுப்(chevalier de l'ordre national du Mérite) பட்டியலில் அலியும் சேர்க்கப்படுகிறார் என்ற தகவல் அதில் அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பாரிஸின் இடது கரையில் Saint-Germain-des-Près
வட்டகையில் நடந்து திரிந்து கூவிக் கூவிப் பத்திரிகை விற்பதை பெருவிருப்புடன் செய்துவந்த அவருக்கு இது ஒரு பெரும் வெகுமதி ஆகும்.

ஒரு காலத்தில் மாணவனாக இருந்த போது அலியிடம் செய்தித் தாள்களை வாங்கிப் படித்துவந்த அதிபர் மக்ரோன், பிரெஞ்சுக் கலாசாரத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக பிரான்ஸின் மிக உயர்ந்த கௌரவங்களில்
ஒன்றான செவாலியர் விருதை அடுத்த மாதம் அவருக்கு வழங்கவிருக்கிறார்.
பாகிஸ்தானில் ராவல்பிண்டியில் பிறந்த அலி அக்பர் 1972 இல் உழைத்துத் தாயாருக்கு ஒரு வீடு கட்டிவிட வேண்டுமென்ற குறிக்கோளுடன், தனது இருபதாவது வயதில் படகு மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு வந்து குடியேறினார்.
பிரான்ஸில் Rouen (Seine-Maritime) துறைமுக
நகரில் பாத்திரங்களைக் கழுவும் தொழில் புரிந்த பிறகு அங்கிருந்து பாரிஸ் நகரம் வந்த அவர் பின்னர் இங்கு வதிவிட உரிமையைப் பெற்றார். செய்தித் தாள்களை விற்கின்ற ஒருவரோடு கிடைத்த அறிமுகம்
அவரையும் அந்தத் தொழில் மீது நாட்டம் கொள்ளச் செய்தது. மிகப் பிரபலமாக அறியப்பட்ட"சார்ளி ஹெப்டோ" என்ற சர்ச்சைக்குரிய பிரெஞ்சு
கேலிச் சித்திரச் செய்தித் தாள்களையும், 'லு மொன்ட்' என்ற தேசிய தினசரியையும் காவித் திரிந்து விற்கத் தொடங்கினார். செய்தி என்றால் பத்திரிகை மட்டுமே என்றிருந்த இணையத்துக்கு முந்திய அந்த நாட்களில் செய்தித் தாள்களுக்கு இருந்த பெரு மதிப்பு அவற்றை விற்பனைசெய்கின்றவர்களுக்கும் ஒரு ஒளிவட்டத்தைக் கொடுத்தது. அலி இந்தப் பணியை ஏற்றுக்கொண்ட போது அவரோடு மேலும் நாற்பது பேர் நகரில் தெருத்தெருவாக நடந்தும் சைக்கிள்களிலும் பத்திரிகைகளை விற்றுக்கொண்டிருந்தனர்.
இப்போது அலி ஒருவர் மட்டுமே அந்த வேலையைத் தொடர்ந்து செய்கின்ற ஒரேயொருவராக இருக்கிறார்.
ஆயினும் தான் மகிழ்ந்து திளைத்துத் திருப்திகண்ட அந்தப் பணியை முடித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவரது காலடியிலும் வந்து நிற்கிறது.
ஆம் செய்தித் தாள்களை வாங்கிப் படிக்கின்ற ஒரு பெரும் யுகம் நிறைவுக்கு வந்து விட்டது.
"இப்போது எல்லாமே டிஜிட்டல் தான். மக்கள் தங்கள் தொலைபேசிகளைப் பார்க்கவே விரும்புகிறார்கள்..."
"இணையத்துக்கு (இன்ரநெற் றுக்கு) முந்திய காலங்களில்
பத்திரிகை வெளியான அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக எண்பது "லு மொன்ட்" (Le Monde) பிரதிகளை விற்றுத் தீர்த்துவிடுவேன்...
இப்போது ஒரு பிரதியை விற்பதற்கே வாடிக்கையாளர்களைத் துரத்தவேண்டி இருக்கிறது.. "
" என்னோடு இந்தத் தொழிலில் இருந்த அனைவருமே மறைந்து போனார்கள்.. 1973இல் நான் இங்கு தொழிலைத் தொடங்கியபோது, பாரிஸில் 35 அல்லது 40 பேர் வியாபாரிகள் இருந்தோம்.. இப்போது நான் மட்டும் தனியாக இருக்கிறேன்"
-இவ்வாறு அலி அக்பர் பாரிஸ் செய்தி ஊடகங்களிடம் கூறியிருக்கிறார். செய்தித் தாள் வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவு தன்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை என்று கூறும் அவர், அந்தத் தொழிலின் முழுமையான மகிழ்ச்சியாலேயே தொடர்ந்தும் அதைச் செய்துவந்தேன் என்று திருப்திப்படுகிறார்.
"நான் ஒரு மகிழ்ச்சியான நபர். நான் சுதந்திரமாக இருக்கிறேன். இந்த வேலையில், நான் முற்றிலும் சுதந்திரமாக இருக்கிறேன். எனக்கு யாரும் உத்தரவுகளை வழங்குவதில்லை. அதனால்தான் நான் அதைச் செய்கிறேன்" - என்கிறார் அலி.
கோப்பிக் கடைகள், உணவகங்கள் நிறைந்த பாரிஸ் ஆறாவது நிர்வாகப் பிரிவில் அவர் அனைவருக்கும் நன்கு பரீச்சயமானவர்.அனைவராலும் மிகவும் விரும்பப்படும் நபர்.
"நான் முதன்முதலில் 1960களில் இங்கு வந்தேன், நான் அலியுடன் வளர்ந்தேன். அவர் ஒரு சகோதரனைப் போன்றவர்," - என்று பெண் ஒருவர் கூறுகிறார்.
"அவர் அனைவரையும் அறிவார். அவர் மிகவும் வேடிக்கையானவர்," என்று மற்றொரு பெண் கூறுகிறார்.
தாஸ்நியூஸ் - பாரிஸ்
11-08-2025
 

Leave a comment

Comment