TamilsGuide

எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையான குணம் குறித்தும் பகிர்ந்துகொண்ட சாவி

ஏவி.எம். தயாரித்த 'அன்பே வா' படப்பிடிப்பைக் காண, அவர்களின் அழைப்பின்பேரில் ஆனந்த விகடன் சார்பாக சிம்லா சென்றிருந்தார் சாவி. அங்கே, 'புதிய வானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது' என்ற பாடல் காட்சியில், தம்மோடு சாவியையும் நடந்து வரச் சொல்லி அன்புக் கட்டளை இட்டார் எம்.ஜி.ஆர். ஆம்... மறுமுறை உங்கள் தொலைக்காட்சியில் அந்தப் பாடல் காட்சி ஒளிபரப்பாகும்போது கவனித்துப் பாருங்கள்... எம்.ஜி.ஆருடன் கோட் சூட் அணிந்தபடி கம்பீரமாக நடந்து வருவார் சாவி. 'அன்பே வா' படம் சூப்பர் டூப்பர் ஹிட்! 'இந்தப் பெருவெற்றிக்குக் காரணம், நான் அதில் நடித்திருந்ததுதான்!' என்று தமாஷாகச் சொல்வார் சாவி.

எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையான குணம் குறித்தும் பகிர்ந்துகொண்டிருக்கிறார் சாவி. சிம்லாவில் படப்பிடிப்பு நடந்த சமயத்தில், எம்.ஜி.ஆரைக் காண ராணுவ வீரர்கள் சிலர் விரும்பினார்களாம். எம்.ஜி.ஆரும் அவர்களிடம் அன்பாக உரையாடி, அவர்களின் பணிகளையும், அவர்களுக்கு இருக்கும் சிரமங்களையும் அக்கறையோடு கேட்டறிந்தாராம். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாராம். அந்த வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரின் தாயார் இங்கே தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் குக்கிராமத்தில் வசிக்கிறார். அந்த வீரர், தான் இங்கே மிகவும் நலமாக இருப்பது குறித்து தன் அம்மாவுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், தாயாருக்காக தான் வாங்கி வைத்திருக்கும் ஒரு எளிய புடவையை தன் அம்மாவிடம் சேர்க்க வேண்டும் என்றும் எம்.ஜி.ஆரைக் கேட்டுக்கொண்டு, அவசரம் அவசரமாக தன் தாயாருக்கு ஒரு கடிதம் எழுதி, அதையும் எம்.ஜி.ஆரிடம் கொடுத்து, அதை எப்படியாவது தன் தாயிடம் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.

"நாமாக இருந்தால் ஆகட்டும் என்று சொல்லி, அதை அத்தோடு மறந்திருப்போம். எம்.ஜி.ஆர். அப்படிச் செய்யவில்லை. சென்னை திரும்பியதும் முதல் காரியமாக அந்தப் புடவை, அந்த வீரர் கொடுத்த கடிதம் ஆகியவற்றோடு தனது அன்பளிப்பாக ஒரு பெரிய தொகையை வைத்துப் 'பேக்' செய்து, தனது உதவியாளரை அழைத்து, ஒரு காரில் உடனடியாகக் கிளம்பிச் சென்று, அந்த வீரரின் கிராமத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அவரின் தாயாரிடம் இந்த பார்சலை சேர்த்துவிட்டு வரும்படி உத்தரவிட்டார். அங்கே அந்த அம்மாவின் மகன் மிகவும் நலமாக இருக்கும் சேதியையும் சொல்லிவிட்டு வரும்படி சொன்னார். இந்த மனிதாபிமான பண்பை வேறு எவரிடமும் நான் பார்க்கவில்லை. அவரை 'மக்கள் திலகம்' என்று அழைப்பது மிகவும் சரியே!" என்று சிலாகித்துச் சொன்னார் சாவி.

-Vikatan EMagazine

Leave a comment

Comment