கடந்த 1975 கால கட்டங்களில் எம்ஜிஆரும் கவிஞர் கண்ணதாசனும் நட்பு இல்லாமல் மனஸ்தாபம் காரணமாக இணைந்து பணியாற்றுவதைத் தவிர்த்து வந்த நேரமது.
அப்போதுதான் எம்ஜிஆர் - ஸ்ரீதர் கூட்டணியில் "உரிமைக்குரல்" உருவாகிறது. அந்தப் படத்தில் ஒரு அற்புதமான காதல் பாடல் வேண்டும்.
வேறு கவிஞர்களை வைத்து எழுதிய பாடல்களில் அவ்வளவாக திருப்தியில்லை எம்.ஜி.ஆருக்கு. உடனே எம்.எஸ்.வி., அடுத்த நாள் வேறு பாடலுடன் வருவதாகக் கூறிச் சென்றவர், கவிஞரை அழைத்தார்.
கவிஞர் முதலில் தயங்கினாலும், தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி, அழைத்து பாடல் எழுதி வாங்கிவிட்டார். இயக்குநர் ஸ்ரீதருக்கும் பிடித்துவிட்டது. இனி எம்ஜிஆரிடம் காட்டி உண்மையைச் சொல்ல வேண்டும்.
முதலில் பாடலை எம்.ஜி.ஆரிடம் காட்டினார் எம்.எஸ்.வி. பாடலை படித்ததும் எம்.ஜி.ஆர். முகத்தில் பரம திருப்தி.
"இப்படி அவரால் மட்டும்தானே எழுத முடியும்?" என்று சொல்லிக் கொண்டே எம்.எஸ்.வி.யைப் பார்க்க,
"ஆமாண்ணே.. இது கவிஞர் எழுதியதுதான்...
நீங்க கோவிச்சிக்க மாட்டீங்கன்ற நம்பிக்கையில எழுதச் சொன்னேன்.. இனி உங்க அபிப்பிராயம்," என்றாராம்.
"நல்லாருக்கு.. இந்தப் பாடலே அந்தச் சூழலுக்கு சரியா இருக்கும்" என்று கூறி அனுமதித்தாராம். இது அன்றைக்குப் பெரிய விஷயம்.
காரணம், எம்.ஜி.ஆர். சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார்.
அவர் விருப்பத்துக்கு மாறாக ஒரு விஷயத்தைச் செய்து, பின் அதற்காக அவரிடம் பாராட்டும் பெற்றது எம்.எஸ்.வி.யாகத்தான் இருக்கும் என்பார்கள்.
காரணம், கண்ணதாசனின் அதி அற்புதமான தமிழ்.
எம்.ஜி.ஆர். மயங்கிய அந்தப் பாடல் வரிகள்...
*"விழியே கதை எழுது, கண்ணீரில் எழுதாதே.. மஞ்சள் வானம்.. தென்றல் காற்று.. உனக்காகவே நான் வாழ்கிறேன்..!"
திண்டுக்கல் சமையல்


