அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்து வருகிறார். சமீபத்தில் இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்து அறிவித்தார். அதேபோல் பிரேசிலுக்கும் 50 சதவீத வரியை டிரம்ப் விதித்து உள்ளார். டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. வரிகளால் பாதிக்கப்பட்ட சில நிறுவனங்கள் மற்றும் மாகாணங்கள் தொடர்ந்த வழக்குகள் அமெரிக்காவின் கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
வரி விதிப்பு நடவடிக்கையால் பங்குச் சந்தையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்கள் எட்டப்படுகின்றன. மேலும் பில்லியன் கணக்கான டாலர்கள் நம் நாட்டின் கருவூலத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன. இந்த வரிகள் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தி வருமான வரிக்கு ஒரு மாற்றாகவும் அமையும்.
இந்த முக்கியமான தருணத்தில் அமெரிக்கா இதுவரை கண்டிராத மிகப்பெரிய பணவரவு, செல்வம் உருவாக்கம் மற்றும் பலத்தை ஒரு தீவிர இடதுசாரி கோர்ட்டு குறைக்கும் அல்லது சீர்குலைக்கும் வகையில் நமக்கு எதிராகத் தீர்ப்பளித்தால், இந்த மிகப்பெரிய தொகைகளை நம்மால் திரும்பப் பெற முடியாது. வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிராக கோர்ட்டு தீர்ப்பு அளித்தால், அது 1929-ம் ஆண்டு ஏற்பட்ட மந்தநிலையை மீண்டும் ஏற்படுத்திவிடும்.
இந்த வகையான மகத்துவத்தை மீண்டும் பெற அமெரிக்காவிற்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்காது. ஆனால் நமது நீதிமன்ற அமைப்பை யாரையும் விட நன்றாக எனக்குத் தெரியும், வரலாற்றில் என்னை போன்று சோதனைகள், இன்னல்கள், நிச்சயமற்ற தன்மைகளைக் கடந்து வந்தது யாரும் இல்லை. நமது நாடு வெற்றிக்கும் மகத்துவத்திற்கும் தகுதியானது, கொந்தளிப்பு, தோல்வி மற்றும் அவமானத்திற்கு அல்ல.
இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.


