நைஜீரியாவில் லாகோஸ் விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு பறவைகள் கடத்தப்பட்ட 1,600 பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இருந்து பல அரிய வகை பறவைகள் ஆசிய நாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன. குறிப்பாக கிளி, கேனரி போன்ற பறவைகள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.90 ஆயிரம் வரை விலை போகிறது.
எனவே அழிந்து வரும் வன உயிரினங்களின் கடத்தலை கண்காணிக்க தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், லாகோஸ் விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு பறவைகள் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது ஒரு கும்பல் மோதிர கழுத்து கிளி உள்பட 1,600-க்கும் மேற்பட்ட பறவைகளை கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் அங்குள்ள தேசிய பூங்காவிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறினர்.


