பலாங்கொட, ஹால்பே ரத்தனகொல்ல மலைப் பகுதியல் இன்று திடீரென ஏற்பட்ட தீப்பரவலைத் தொடர்ந்து இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 ரக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தீ வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், தீயை அணைக்க இராணுவத்தினரும் உள்ளூர்வாசிகளும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
காட்டுத் தீயை அணைக்க, பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக விமானப் படையினர் இதில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். துரிதமாகச் செயல்பட்ட இலங்கை விமானப்படை, வான்வழி தீயை அடக்கும் முயற்சிகளுக்கு உதவுவதற்காக, பம்பி பக்கெட் நடவடிக்கையை மேற்கொண்டது.
மேலும் தீயானது பரவுவதையும், வனப்பகுதிக்கு சேதம் ஏற்படுவதையும் தடுக்கும் நோக்கில், பேரிடர் மேலாண்மை மையத்துடன் இணைந்து வான்வழி தீயணைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தலையீடு, விரைவான பேரிடர் மீட்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அமைச்சகத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் பாராட்டுவதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அவசர சேவைகளுடன் இணைந்து, தேவைப்பட்டால் மேலும் நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை அறிவித்துள்ளது.


