2023-ம் ஆண்டு வெளியான 'பார்க்கிங்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்ற எம்.எஸ்.பாஸ்கர், தற்போது குட்டி ஸ்டோரிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் புவனேஷ் சின்னசாமி தயாரிக்கும் 'கிராண்ட் பாதர்' என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை பிராங் ஸ்டார் ராகுல் இயக்குவதுடன், எம்.எஸ்.பாஸ்கருடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இவர்களுடன் ஸ்மீகா, அருள் தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த், பிரியதர்ஷினி, அஞ்சலி ராவ், அபிநயா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார்.
திகில் மற்றும் நகைச்சுவை கலந்து இப்படம் தயாராகி இருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் தேசிய விருதை வென்றிருக்கும் எம்.எஸ்.பாஸ்கரை, படக்குழுவினர் பாராட்டி கவுரவித்தனர். மேலும் அவரை கவுரவப்படுத்தும் விதமாக படத்தில் 'பர்ஸ்ட் லுக்' மற்றும் தலைப்பையும் வெளியிட்டு மகிழ்ந்தனர். இதில் எம்.எஸ்.பாஸ்கரின் புதிய தோற்றம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.


