TamilsGuide

80 அடி இந்திய இழுவைப் படகுடன் 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர்  கைது செய்துள்ளதுடன் அவர்களின் படகினையும் பறிமுதல் செய்துள்ளனர்.

80 அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த இழுவைப் படகு தமிழ்நாட்டைச் சேர்ந்ததாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இந்திய மீனவர்கள் பத்தலன்குண்டு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு, பின்னர் டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்
சுசந்த கஹவத்த கருத்துத் தெரிவிக்கையில் ” கைப்பற்றப்பட்ட படகில் நவீன தொழில்நுட்ப சாதனங்கள், GPS வரைபடங்கள் மற்றும் மீன்களைக் கண்டறியும் கருவிகள் என்பன காணப்பட்டிருந்தன. 

இதன் மூலம் இந்த மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்திருப்பது உறுதியாகியுள்ளது.
இலங்கையில் இழுவை வலை மீன்பிடித் தொழில் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. இது உள்ளூர் மீனவ சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து
இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவறான செயற்பாடாகும்
இதன் காரணமாகவே உள்ளூர் மீனவர்களின் கடும் எதிர்ப்புக்களை வெளியிடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளோம்
அதன்பின்னர் சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடைவடிக்கை எடுக்கப்பட்டு
நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தவுள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment