TamilsGuide

கடும் எதிர்ப்பை அடுத்து தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவித்த கிங்டம் பட நிறுவனம்

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான 'கிங்டம்', ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

இதனையடுத்து, கிங்டம் திரைப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, 'கிங்டம்' படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், தமிழ் மக்களிடம் 'கிங்டம்' பட நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அப்பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிங்டம் படத்தின் சில காட்சிகள் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக அறிந்தோம். படத்தின் கதை முற்றிலும் கற்பனையானது என உறுதியளிக்கிறோம். தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். இதையும் மீறி மக்களின் உணர்வுகள் ஏதேனும் புண்பட்டு இருந்தால் மிகவும் வருந்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment