தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் தனுஷ். பாலிவுட் திரை உலகிலும் அறிமுகமாகி படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் புதிய இந்தி படமொன்றில் தனுஷ் நடித்துள்ளார். சமீப காலமாக பாலிவுட் விழாக்களில் அதிகமாக பங்கேற்று வரும் தனுஷ் பிரபல நடிகையான மிருணாள் தாக்கூரை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தீவிரமாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
சீதாராமம் படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமான மிருணாள் தாக்கூர் குறுகிய கால கட்டத்தில் முன்னணி கதாநாயகி அந்தஸ்தை பெற்றுள்ளார். பாலிவுட் திரை உலகிலும் அறிமுகமாகி வெப் தொடர் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மிருணாள் தாக்கூர் கடந்த 1-ந்தேதி தனது பிறந்தநாளை மும்பையில் கொண்டாடினார். இதையொட்டி நடந்த விருந்து நிகழ்ச்சியில் நடிகர் தனுசும் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு வந்த தனுசை மிருணாள் தாக்கூர் வேகமாக சென்று வரவேற்ற வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. இது மட்டுமின்றி அஜய் தேவ்கன்- மிருணாள் தாக்கூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சன் ஆப் சர்தார் படத்தின் பிரிமியர் காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதிலும் தனுஷ் பங்கேற்றார்.
ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மெய்ன்' என்ற இந்தி படத்தில் தனுஷ் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி மும்பையில் 3-ந்தேதி நடந்த விருந்து நிகழ்ச்சியில் தனுசுடன் மிருணாள் தாக்கூரும் பங்கேற்றார். இதையடுத்து தனுஷ் மிருணாள் தாக்கூர் ஆகியோருக்கு இடையே காதல் இருந்து வருவதாக பாலிவுட் ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேலும் தனுஷ், மிருணாள் தாக்கூர் விவகாரம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து தனுஷ், மிருணாள்தாக்கூர் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. தனுஷ் ஏற்கனவே ஐஸ்வர்யாவை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகளுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றனர்.


