மாற்றுத்திறனாளி சிறுவர்களின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சித் ரூ – 2025’ கலை நிகழ்ச்சி கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
‘ஒன்றாக – கைவிடாத’ எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கையின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாத்து, சமூகமயப்படுத்தல், வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் அவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் முயற்சியாக இந்நிகழ்ச்சி நடை பெற்றது.
ஆறு வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்காக சமூக சேவைகள் திணைக்களத்துக்கு இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் ரூ.632 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாகாண மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் வழிகாட்டல் மையங்கள், சிறுவர் பராமரிப்பு மையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் பிள்ளைகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கி கௌரவித்திருந்தார்.
அத்துடன் பிள்ளைகளுடன் நேரில் உரையாடியும், குழு புகைப்படங்கள் எடுத்தும் தனது அன்பை பகிர்ந்துகொண்டார்.
இதன்போது , மாணவியொருவரால் வரையப்பட்ட ஜனாதிபதியின் ஓவியமும், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் அமைச்சர் உபாலி பன்னிலகே, பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


