யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி - சுதாகர்.
யூடியூப்-ஐ தாண்டி வெள்ளித்திரையில் திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டு வந்தனர். அதன்படி பொது மக்களிடம் பணம் வசூலித்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டனர்.
இருவரின் முயற்சிக்கு அதிக தொகை கிடைத்த போதிலும், அந்தப் படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில், கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஓ காட் பியூட்டிபுல் ( Oh God Beautiful ) என்ற இரண்டாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.
விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், 'ஓ காட் பியூட்டிபுல்' படத்தின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளது.


