அமெரிக்காவால் இலங்கை மீது விதிக்கப்பட்ட திருத்தப்பட்ட 20% பரஸ்பர வரியை ஐக்கிய தேசியக் கட்சி (UNP) வரவேற்றுள்ளது.
அதேநேரம், வொஷிங்டனுடனான கலந்துரையாடல்களின் போது எட்டப்பட்ட ‘அர்த்தமுள்ள வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்’ குறித்து தெளிவான அறிக்கையை வெளியிடுமாறும் UNP அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடித்ததற்காக அரசாங்கத்தையும் பேச்சுவார்த்தை குழுவையும் பாராட்டும் விதமாக UNP வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் பரஸ்பர கட்டண விகிதம் 20% ஆக இருக்கும் என்று அமெரிக்கா வியாழக்கிழமை (ஜூலை 31) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.
இது நிர்வாக உத்தரவு 14257 இன் கீழ் முன்னர் விதிக்கப்பட்ட 30% இலிருந்து குறைக்கப்பட்டது.
இந்த வரி விதிப்பானது எதிர்வரும் ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்கு பின்னர் நடைமுறைக்கு வரவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த புதிய நிர்வாக உத்தரவின்படி, “சில வர்த்தக பங்காளிகள் அமெரிக்காவுடனான அர்த்தமுள்ள வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறுதிமொழிகளுக்கு ஒப்புக்கொண்டுள்ளனர் அல்லது ஒப்புக்கொள்ளும் தருவாயில் உள்ளனர்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் அரசாங்கத்திடமிருந்து அது தொடர்பான தெளிவான அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.


