தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கிங்டம்' திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாகும் என தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார். இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.
திரைப்படம் வருகிற 31-ம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு அண்டர் கவர் ஸ்பையாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு விழா நேற்று ஐதராபாத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அப்போது விஜய் தேவரகொண்டா கூறியதாவது "நான் சென்னையில் இருப்பதால், சூரிய அண்ணாவுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். நாங்கள் முதலில் டீசரை வெளியிட்டபோது, எனது இயக்குனர் சூரியா அண்ணாவின் குரலை வசனகர்த்தாவாகக் கேட்க விரும்பினார். தாரக் (என்.டி.ஆர் ஜூனியர்) மற்றும் ரன்பீர் கபூர் அவர்கள் தெலுங்கு மற்றும் இந்தியில் டீசருக்கு குரல் கொடுத்தனர்.
மிகவும் சக்திவாய்ந்த குரல் கொண்டவர் என்பதால், தமிழில் சூர்யா அண்ணாவை நாங்கள் விரும்பினோம். உதவி கேட்பது எனக்குப் பிடிக்காததால், நான் அழைக்க விரும்பவில்லை, ஆனால் எனது இயக்குனரின் வேண்டுகோளின் பேரில், நான் விருப்பமின்றி சூர்யா அண்ணாவை அழைத்து, நான் கேட்க போகும் உதவியை மறுக்கச் சொன்னேன். ஆனால் நான் விளக்கியபோது, அவர் உடனடியாக எந்தவித யோசனி இல்லாமல் எனக்கு உதவினார். அதற்காக நான் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்; இட் மீன்ஸ் அ எ லாட், தேங்க் யூ சோ மச் அண்ணா " என கூறினார்.
படத்தின் பாடலான ரகிலே ரகிலே லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 2 மணி நேரம் 40 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது.


