ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பில் அவதூறான கருத்தை வெளியிட்டமைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பில் தான் தெரிவித்த கருத்துக்கு நிபந்தனையின்றி வருத்தம் தெரிவிப்பதாக அவர் இன்று (29) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவதூறுக்கு 10 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தாக்கல் செய்த வழக்கு தொடர்பான இன்றைய நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, அவரது சட்ட பிரதிநிதிகள் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த விசாரணைக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இன்று நீதிமன்றில் நேரில் முன்னிலையானதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் வழக்கில் பரஸ்பர தீர்வை எட்டினர்.
இந்த வழக்கு 2023 ஆகஸ்ட் 19 அன்று மத்திய கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய ஒரு பொதுக் கூட்டத்தில் இருந்து எழுந்தது.
அங்கு ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி, அநுரகுமார திஸாநாயக்க மொல்டாவில் ஐந்து பில்லியன் டொலர் முதலீடு செய்துள்ளார் என்று கூறினார்.
இந்த அறிக்கை தன்னை ஊழல்வாதியாகவும் நேர்மையற்ற நோக்கங்களுடன் செயல்படுபவராகவும் சித்தரிக்கும் நோக்கம் கொண்டதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாதாடுகிறார்.


