பழம்பெரும் தியாகியான சங்கரலிங்கனார், 'மெட்ராஸ் ஸ்டேட்' என்று அழைக்கப்பட்ட தமிழர்களின் நிலப்பரப்பை ' தமிழ்நாடு' என்று பெயர் மாற்றக்கோரி 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். அவர் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, விருதுநகர் தேசபந்து திடலில் “உயிர் பெரிதன்று, மானமே பெரிது” என்ற லட்சிய முழக்கத்தோடு உண்ணாவிரதத்தைத் தொடங்கிய நாள் (27.7.1956) இன்று.
சங்கரலிங்கனார்
பின்வரும் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துதான் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவை
மொழிவழி மாநிலம் அமைக்கவேண்டும்.
சென்னை ராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடவேண்டும்.
ரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் சமமாக பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்
வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கவேண்டும். அவர்களுக்கு சைவ உணவு மட்டுமே அளிக்கவேண்டும்.
அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் ஆடை உடுத்தவேண்டும்.
அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் எளிமையாக வாழவேண்டும். ஆடம்பரச் செலவுகள் செய்யக்கூடாது.
தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.
தொழிற்கல்வி அளிக்கவேண்டும்
நாடு முழுவதும் மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும்.
விவசாயிகளுக்கு விளைச்சலில் 60 விழுக்காடு வாரம் (குத்தகை) அளிக்கவேண்டும்
மத்திய அரசு அலுவல் மொழியாக இந்தியை மட்டும் பயன்படுத்தக்கூடாது
பொது இடங்களில் ஆபாசமாக நடந்துகொள்வதைத் தடுக்கவேண்டும்.
சட்டமன்றத்தில் தீர்மானம்
கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம், காங்கிரஸ் தலைவர் கக்கன், சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் சங்கரலிங்கனார் மறுத்துவிட்டார். லட்சியத்துடனும் உறுதியுடனும் இறுதிவரை இருந்தார். தொடர்ந்து 76 நாள்கள் உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனாரின் உடல்நிலை 10.10.1956 அன்று மிகவும் மோசமான நிலையை எட்டியது. மருத்துவனைக்குக் கொண்டு சென்றும் அவர் சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. 13.10.1956 அன்று தியாகியின் உயிர் மண்ணைவிட்டுப் பிரிந்தது.
##தியாகி சங்கரலிங்கனாரின் கனவை
நிறைவேற்றினார் அறிஞர் அண்ணா
Chandran Veerasamy


