காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 4 கோடி பெறுமதியான கஞ்சா மற்றும் அதனை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 1 கோடி மதிப்பிலான வேன்கள், கார்களையும் இந்திய பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இக்கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இருவர் உட்பட 5 கடத்தல்காரர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம், கீழக்காசாக்குடி லெட்சுமி நகரில் கடந்த 16ஆம் திகதி வீடொன்றில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 300 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக தமிழக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
குறிப்பிட்ட இடத்தில் கஞ்சா குடோனாக இயங்கிய வீட்டை பொலிஸார் சோதனை செய்து 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதன்போது, இலங்கைக்கு படகுமூலம் கடத்த வசதியாக மூட்டைகளுடன் பதுங்கியிருந்த இருவரையும், கைது செய்தனர்.
இவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் காரைக்காலுக்கு, இலங்கைக்கும் இடையே மிகப்பெரிய கஞ்சா மாபியாக்கள் நடமாட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேற்படி குற்றவாளிகளுக்கு மூட்டைகளில் லொறிகள், கார்களில் கஞ்சா தொகையை அனுப்பி வந்த முக்கிய குற்றவாளியை பொலிஸார் கைது செய்தனர்.
இலங்கையிலிருந்து மீனவர்கள் அவ்வப்போது இரவோடிரவாக சிறிய படகுகளில் காரைக்கால் வந்துள்ள நிலையில் அவர்கள் காரைக்காலிலிருந்து படகில் கஞ்சாவை ஏற்றி இலங்கைக்கு கடத்தியும் வந்துள்ளனர்.
இவர்களை பிடிப்பதற்காக பொலிஸார், கஞ்சா வியாபாரிகளை போல பேசி இலங்கையிலிருந்து படகில் வரவழைத்தனர்.
இதன்போது கஞ்சா கொள்முதலுக்கு காரைக்காலை நோக்கி இரவு நேரத்தில் படகில் வந்த இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவரையும் , யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவரையும் இந்திய பொலிஸார் நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்ததுடன்
அவர்கள் வந்த படகையும் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதன்போது விசாரணைகளில் இலங்கையில் இருந்து இந்திய கடற்படை, கடலோர காவல்படை, கடலோர காவல் படையினருக்கு சந்தேகம் எழாதபடி, சிறு படகுகளில் வந்து கஞ்சா கடத்தலை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, காரைக்காலில் கஞ்சாவை புழங்க விடுவதில் இதுவரை சிறு, குறு வியாபாரிகளே சிக்கி வந்துள்ள நிலையில் ஒரே நேரத்தில் 4 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் கஞ்சா பிடிபட்டது இதுவே முதல்முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


