TamilsGuide

ஈழத்து இராமேஸ்வரம் …

ஒவ்வொரு முறையும் இலங்கை சென்றாலே, என் பயணத்தின் ஒரு கட்டமாக புங்குடுதீவை தவறாமல் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தோடு நான் இருப்பேன். அங்கே என்னுடைய அப்பாச்சியின்
இல்லம் இப்பொழுது இல்லை.
இருந்தாலும்… அது அப்பா பிறந்த ஊர் என்பதாலோ, அல்லது அவர் பற்றிப் பேசும்போதெல்லாம் கண்ணில் மிளிரும் அந்த சின்ன தீவுக்கான பாசத்தாலோ, அந்த ஊரை ஒவ்வெரு முறையும் பார்த்துவிட்டுத்தான் திரும்ப வேண்டும் என்ற மனநிலை உண்டாகிவிடுகிறது.
அப்பாவையே நேரில் சந்தித்ததுபோல் ஒரு அனுபவம். ஒரு வாடிய நிஜத்துக்குள் பசுமைச் சாயல் பூசும் சின்ன ரகசியம்.
இந்த முறை நாட்கள் குறைவானவை. என்றாலும் மனம் ஏற்கவில்லை. “அப்பா ஊருக்கு போய் திரும்பணும்” என்ற மன உறுதி கைக்குழந்தை போலக் கூடவே வந்தது.
அந்த உறுதியில், இந்த முறை ஒரு புதிய ஆசை தளர்த்தியது – “இந்த தடவை அந்த கோயிலும் பார்க்கணும்…”
அந்த கோயில் – பாணவிடை சிவன் கோயில் – எனது பயணத்தின் இலக்காக மாறியது.
நான் வழக்கமாக கோயில்கள் தேடி போய் வழிபடும் ரகம் இல்லை. ஆனாலும் இங்கே மட்டும் ஏதோ ஒரு மின்னல் விழுந்து விட்டதுபோல் இருந்தது. அது அப்பாவின் சிவபக்தியின் தாக்கமா? அல்லது அவர் பிறந்த ஊரில் இருக்கும் ஊர் சிவனின் அழைப்பா? தெரியவில்லை…
ஒரு சிறு தயக்கம், “அப்பா ஊர்” தான், ஆனால் அங்குள்ளவர்களில் யாரும் எனக்குத் தெரியாதே.
இணுவிலில் காலம் காலமா செல்லும் ஆலயங்களுக்கு போகும் போதே எதோ வேற்று கிரகவாசிகளைப் பார்ப்பது போலவே பார்ப்பார்கள். கோயில் பூசகர் அதுக்கு ஒரு படி மேலாக அம்மா பெயர், அப்பா பெயர், வீட்டு முகவரி, எமது பூர்வீகத்தையே கேட்டுத் தீர்த்துவிட்டு தான் வீபூதியை கையில் தருவார்.
இங்கே எப்படி?
இங்கு ஒருவரையும் தெரியாது எப்படி சாமளிப்பது? அந்தக் குழப்பம் மனதில் ஓடிக்கொண்டிருந்தபோதே, கோயில் வாசலடி வந்துவிட்டேன். தயங்கியபடி வாசலில் நின்று கோயிலை எட்டிப்பார்க்கின்றேன்.

“உள்ள வந்து கும்பிடுங்கோ பிள்ளை!”
அந்த வார்த்தையில் இருந்த அன்பு என்னைச் சிதறடித்தது. யாரென்று கேட்கவில்லை. யாரின் மகள் என்றும் கேட்டுப் பார்க்கவில்லை. எதுவும் இல்லை. அது ஒரு அழைப்பு, அன்பான வரவேற்பு.
நான் அந்த ஊரைச் சேர்ந்தவனென்று அறியாமல், அந்த அன்புடன் கூறப்பட்ட வார்த்தை என் தயக்கங்களையும், அடக்கங்களையும் கரைத்துவிட்டது.
“என்னை அறியாதவர்கள் இவ்வளவு மனதளவாக இருந்தால், அங்கு உறைவாகத் தங்கி இருக்கும் சிவன் எவ்வளவு பரிமளமிக்கவராக இருப்பார்?”
அவர்களின் பார்வையில், பேச்சில், புன்னகையில் அந்த பரிசுத்தம் தெரிந்தது.
அந்த கோயிலில் இருந்தது வெறும் கட்டிடம் அல்ல; அது ஒரு மனித நேயம் கொண்ட நிழல்.
அந்த சிவனும் அவ்வூர் மக்களும் என்னை ஏதோ ஒரு வகையில் இழுத்துக்கொண்டார் போல உணர்ந்தேன். கோயிலுக்குச் செல்லும் பாதையில் கூட ஒரு அழைப்பு இருந்தது. அமைதி, அனுமதி, அருள் — அனைத்தும் அந்த வழிக்குள் கலந்து ஓடியது போல்.
கோயிலின் கருங்கல் கட்டிட அமைப்பில் ஒரு கம்பீர அழகு இருந்தது. நான் இன்னும் இராமேஸ்வரத்திற்கு சென்று பார்க்கவில்லை.
ஆனால் “ஈழத்து இராமேஸ்வரம்” எனச் சொல்லப்படும் பானவிடை சிவன் கோயிலின் அமைப்பு என் மனதை ஒருவித ஆச்சரியத்தோடு நிறைத்தது.
அந்தக் கோயிலின் தீர்த்தக்கேணி
அருகிலுள்ள ஆலமர நிழலில் ஒரு சிறு நேரம் அமைதியாக அமர்ந்திருந்தேன். ஆலமர நிழலில் வீசிய மென்மையான கடல்காற்றில் ஒரு தனிப்பட்ட அமைதி இருந்தது. அந்த நிமிடம் ஒரு புனித உணர்வு போல இருந்தது.
“பிள்ளை, மறக்காமல் சாப்பிட்டு போங்கோ!”
மீண்டும் அதே அன்பான குரல் …
அந்த வார்த்தையில், ஒரு வீட்டின் வாசல் இருந்தது. ஒரு அன்னை கை சேர்க்கும் அன்பு இருந்தது.
சாப்பிட்டுவிட்டு வெளியே வருகிறேன்.
அந்த அன்பு குரல் மீண்டும்:
“சாமிக்கு படைத்த பிரசாதம் வீட்டுக்கு எடுத்துப் போங்கோ.”
என் கையில் சாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட பூக்களுடன் ஒரு சிறிய பார்சல்.
அதை மெதுவாகத் திறந்து பார்க்கிறேன், மிகவும் எளியதொரு அன்புச் செய்தி போல —
எனக்கு மிகவும் பிடித்தமான மோதகங்கள்!
Kalanithy Ramesh

 

Leave a comment

Comment