TamilsGuide

பொது நலவாய நாடாளுமன்ற குழுவினரைச் சந்தித்த அருண் ஹேமசந்திர

இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை,  வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர சந்தித்துக்  கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பின் போது  புவிசார் அரசியல், பொருளாதார மீட்சி, வர்த்தகம், முதலீடு, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள், போருக்குப் பிந்தைய முன்னேற்றம், சுற்றுலா மற்றும் டிஜிட்டல் மாற்றம் உள்ளிட்ட  பல்வேறு விடயங்கள் தொடர்பில்  கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் நீதியை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் தொடர்ச்சியான பங்களிப்புக்கள் குறித்து வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

குறிப்பாக கல்வி, காலநிலை மாற்றம், கடன் மறுசீரமைப்பு மற்றும் நாடாளுமன்ற ஒத்துழைப்பு போன்ற துறைகளில் இவர்களின் உறுதியான ஆதரவிற்காக பிரித்தானிய  அரசாங்கத்திற்கும் உயர் ஸ்தானிகருக்கும் இலங்கையின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகத்  தெரிவித்தார்.

2026 முதல் ஆடைகள், உணவு மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட பரந்த அளவிலான இலங்கைப் பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி அணுகலை வழங்கும் வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தை மேம்படுத்துவதற்கான இங்கிலாந்து அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்பையும் நாங்கள் வரவேற்கிறோம் என தெரிவித்த பிரதி அமைச்சர் இது எங்கள் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு, குறிப்பாக ஆடைத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட உறவை வளர்க்கும் அதே வேளையில், வளர்ச்சி, ஸ்திரத்தன்மை மற்றும் நீதிக்கான நமது அபிலாஷைகளை ஆதரிப்பதன் மூலம், பிரித்தானியா  இலங்கைக்கு ஒரு சிறந்த பங்காளியாகத் தொடர்கிறது என்றும் இதன்போது அவர்  தெரிவித்தார்.
 

Leave a comment

Comment