TamilsGuide

அமெரிக்காவில் தீவிரமாகும் கெடுபிடியால் ஐரோப்பாவுக்கு படையெடுக்கும் மாணவர்கள்

அமெரிக்க பல்கலையில் படிக்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பல்வேறு விசா கட்டுப்பாடுகளை விதித்து விண்ணப்பங்களை வடிகட்டுவதால், இந்திய மாணவர்கள் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல துவங்கி உள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேற்ற விதிகளை கடுமையாக்கி உள்ளார். அதன் ஒரு பகுதியாக மாணவர் விசாக்களுக்கும் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க பல்கலைகளில் சேர்கின்றனர். இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்திய மாணவர்கள். இந்த எண்ணிக்கை, மூன்றாண்டுகளில் இல்லாத அளவு தற்போது சரிவை சந்தித்துள்ளது.

விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் தரவுகளை விரிவாக ஆய்வு செய்வதால், விண்ணப்ப செயலாக்கத்திற்கு காலதாமதமாகிறது. அதன்பின், படிப்பு முடிந்தவுடன் சொந்த நாடு திரும்புவோம் என்பதை நிரூபிக்க போதிய காரணங்கள் இல்லை எனக்கூறி, பெரும்பாலான விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

இதனால், அமெரிக்க பல்கலைகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை 70 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், இந்திய மாணவர்கள் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக்கு ஆலோசனை நிறுவனங்கள் மூலம் விண்ணப்பிக்க துவங்கியுள்ளனர்.

ஜெர்மனி, பிரிட்டன், அயர்லாந்து போன்ற நாடுகளுக்கு அதிகம் பேர் செல்கின்றனர்.
 

Leave a comment

Comment