TamilsGuide

தேயிலைத் தொழிற்துறையை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் தேயிலைத் தொழிற்துறை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையிலான  விசேட கலந்துரையாடலொன்று  நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் தேயிலைத் தொழிற்துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டதுடன், தேயிலைக் கொழுந்துகளின் தரம் மற்றும் தேயிலை பயிர்ச்செய்கையின் உற்பத்தித்திறனை அதிகரித்தல், புதிய சர்வதேச சந்தை வாய்ப்புகளை கண்டறிதல் ஆகிய விடயங்கள் குறித்து  விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் தேயிலைத் தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது  தேயிலைத் தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து சாதகமான தீர்வுகளை வழங்குமாறும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை தேயிலை பயிர்ச்செய்கை தொடர்பில் முறையான தரவு கட்டமைப்பொன்றை தயாரித்தல் உள்ளிட்ட தேயிலை பயிர்ச்செய்கை குறித்து,பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டம் பற்றியும், அதனை முறையாக கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment