கொழும்பு, கஹதுடுவ பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவன் கடத்தல் முயற்சியில் இருந்து தப்பியுள்ளார்.
வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சிறுவன், இரத்தினபுரியில் வைத்து வாகனத்திலிருந்து குதித்து தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி, கெடன்தொல, புதிய பெலன்வாடிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில், கடத்தப்பட்ட சிறுவன் ஒருவன் இருப்பதாக 119 பொலிஸ் அவசரப் பிரிவுக்கு ஒருவர் தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இரத்தினபுரி பொலிஸின் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிறுவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பிலியந்தலையில் உள்ள தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் குறித்த சிறுவன், பிரத்தியேக வகுப்பில் கலந்து கொள்வதற்காக தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, கஹத்துடுவ மயானத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வேனில் வந்த குழுவினரால் சைக்கிளுடன் கடத்தப்பட்டதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந் நிலையில், சிறுவனை கடத்திய குழுவை அடையாளம் காண பொலிஸார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


