மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு தன்னார்வர் ஒருவரால் கனரக தொழில்துறை சலவை இயந்திரம் ஒன்று நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
Friends of Batticaloa hospital Charity அமைப்பின் ஒருங்கிணைப்பில் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த நபரொருவரால் சுமார் 8.5 மில்லியன் ரூபா செலவில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு நன்கொடையாக இந்த சலவை இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
புதிய 35 கிலோக்கிராம் கொள்ளளவுடைய இந்த கனரக தொழில்துறை சலவை இயந்திரத்தினை பாவனைக்காக வழங்கி வைக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வானது, வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.புவனேந்திரநாதன் தலைமையில் இடம்பெற்றது.
வைத்தியசாலையின் சலவைத் தேவை நாளொன்றுக்கு சுமார் 50 கிலோக்கிராமிற்கும் அதிகம் என்பதுடன், எனினும் குறித்த வைத்தியசாலையிலுள்ள இரண்டு கனரக தொழிற்துறை சலவை இயந்திரங்களும் இயங்கு நிலையில் இல்லாத காரணத்தினால், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறிய சலவை இயந்திரம் ஒன்றின் மூலமே வைத்தியசாலையின் சலவைத் தேவைகள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் பூரணப்படுத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்தர்ப்பத்தில் வைத்தியசாலைக்குக் கிடைக்கப்பெற்ற இந்த நன்கொடையானது வைத்தியசாலையின் தூய்மைப்படுத்தல் மற்றும் கிருமியழித்தல் செயற்பாடுகளுக்கு பாரிய பக்கபலமாக அமையும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.


