TamilsGuide

காசா தேவாலயத்தை குண்டுவீசி அழித்த இஸ்ரேல்.. 2 பேர் பலி - போப் ஆண்டவர் கண்டனம்

காசாவில் சுமார் 1,000க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் உள்ளனர். பாலஸ்தீன முஸ்லிம்களுடனும் அவர்கள் இணக்கமான உறவைக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று, காசாவில் உள்ள ஒரே கத்தோலிக்க தேவாலயமான ஹோலி ஃபேமிலி தேவாலயத்தை இஸ்ரேல் குண்டுவீசி அழித்தது. இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.

பாலஸ்தீனத்தின் நிலைமை குறித்து போப் ஆண்டவருக்கு தகவல்கள் வழங்கி வந்த விகார் ஜெனரல் பாதிரியார் கேப்ரியல் ரோமானெல்லி இந்த குண்டுவீச்சில் காயமடைந்தார். அவரது காலில் காயம் ஏற்பட்டது.

போப் லியோ இந்தத் தாக்குதலைக் கண்டித்து, காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தார்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தாக்குதல் குறித்து விசாரித்து வருவதாகக் கூறின. தேவாலயம் அழிக்கப்பட்டதற்கு இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் வருத்தம் தெரிவித்தது.

இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 29 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம், காசாவில் கொல்லப்பட்ட மொத்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 58,500ஐ கடந்துள்ளது. 1,39,600க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 

Leave a comment

Comment