இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு அமெரிக்கா 0% வரி விதித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவடையாததால், அமெரிக்காவுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது என்று பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ கூறினார்.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,
அமெரிக்கா இப்போது 1,161 பொருட்களுக்காக எங்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது.
நாங்கள் அங்கு ஏற்றுமதி செய்கிறோம். இந்த 1,161 பொருட்களில் 42 விவசாய பொருட்களாகும். இவற்றில் ஆடைகளும் உள்ளடங்கும்.
இந்த பொருட்களில் சுமார் 70 சதவீதம் முதல் 80 சதவீதமான பொருட்களுக்கு அவர்கள் எங்களுக்கு 0% வரியை வழங்க உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனினும், ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததால், நாங்கள் இன்னும் எல்லாவற்றையும் வெளியிடவில்லை.
நாங்கள் அவர்களிடமிருந்து இறக்குமதி செய்தாலும் அவர்களால் எங்களுக்கு 0% வீதம் தர முடியுமா என்பது பற்றி நாங்கள் கலந்துரையாடி வருகிறோம்.
இறக்குமதியைப் பொறுத்தவரை, அது சுமார் 300 மில்லியன் என்பதால், தற்போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 0% முதல் 20% வீத வரை வரி வரம்பு உள்ளது.
எனவே அவற்றில் சிலவற்றை நாம் சிறிது குறைத்தால், அரசாங்கத்திற்கு பெரிய வருமான இழப்பு ஏற்படாது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை மீது விதித்த பரஸ்பர வரிகள் குறித்து இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகளின் போது இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆரம்பத்தில் இலங்கை மீது 44% வரியை விதித்த அமெரிக்கா, அண்மையில் அதை 30% வரிகளாக திருத்தியது.
இந்த வரிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 01 முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருத்தப்பட்ட கட்டணங்களை மேலும் குறைக்க இலங்கை அதிகாரிகள் தற்போது அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.


