தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு தொடர்பான முக்கிய அறிவிப்பினை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது ” என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.
வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நடிகர் விஜய், கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி, மாநாட்டுக்கான பூமிபூஜை இன்று (புதன்கிழமை) அதிகாலை நடைபெற்றது. இதனைதொடர்ந்து மாநாட்டுக்கான பந்தல்கால் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


