TamilsGuide

பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு

பல்வேறு காரணங்களினால், சமுதாயத்தில் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சிறுவர் இல்லங்களில் வசித்துவரும் சிறுவர்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பராமரிப்பு நிலையங்களில் பாதுகாக்கப்படும் சிறுவர்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டுத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்திருந்தார்.

இது குறித்து பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” பல்வேறு காரணங்களினால், பல்வேறு சந்தர்ப்பங்களில், சமுதாயத்தில் பெற்றோரின் அரவணைப்போடு தமது இல்லத்தில் வாழ வேண்டிய வாய்ப்பை இழக்கின்ற சிறுவர்களுக்குக் கிடைக்கப்பெறுகின்ற கடைசித் தேர்வாகவே சிறுவர் இல்லமோ அல்லது அத்தகைய பாதுகாப்பு மையங்களோ அமைகின்றன.

அத்தகைய இடங்களில் வசித்து வருகின்ற சிறுவர்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும். ஒரு அரசாங்கம் என்ற வகையில் இந்த சிறுவர்களின் கல்வியை உறுதிப்படுத்துதல், அவர்களின் உடல் மற்றும் உள ரீதியான ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.

ஆகையினால் அனைத்துப் பிள்ளைகளையும் அந்த அனைத்து சிறுவர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருந்து அரசாங்கத்தால் நழுவி விட இயலாது.பாதுகாப்பு இல்லங்களில் வாழ்ந்து வருகின்ற பிள்ளைகளையும் எமது பிள்ளைகளாகவே கருத வேண்டும். ஏனைய சிறுவர்களுக்கு இருக்கின்ற சகல உரிமைகளும் இச்சிறுவர்களுக்கும் இருக்கின்றது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்” இவ்வாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment