'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு "தலைவன் தலைவி" என பெயரிடப்பட்டுள்ளது.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 25 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைப்பெற்றது அதில் இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில் "ஏறத்தாழ மூன்றரை வருடங்களுக்கு பிறகு பத்திரிகையாளர்களாகிய உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இதுவரை 11 படங்களை இயக்கி இருக்கிறேன்.
பத்து படங்களுக்கு நான் நினைத்த ஹீரோயின் கிடைத்ததில்லை. முதல் முறையாக நான் திரைக்கதையில் என்ன எழுதினேனோ..! நித்யா மேனன் தான் வேண்டுமென்று கேட்டேன். அவர் தான் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இதற்காக தயாரிப்பாளர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
96 இயக்குநர் பிரேம் குமாரை பசங்க படத்தின் ஒளிப்பதிவாளராக எனக்கு அறிமுகப்படுத்தியது விஜய் சேதுபதி தான். பசங்க திரைப்படத்தில் விஜய் சேதுபதி வேண்டாம் என ரிஜெக்ட் செய்தேன் . அதற்கு பிறகு விமலை அறிமுகப்படுத்தியதும் விஜய் சேதுபதி தான். இவ்வளவு நல்லவனாக இருக்கிறானே கண்டிப்பாக நன்றாக வருவான் என நினைத்தேன் இப்பொழுது இங்கு வந்து இருக்கிறார்.
அதற்கு பிறகு எனக்கும் அவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. வாழ்க்கையில் விஜய் சேதுபதி நடிப்பில் படத்தை இயக்கக்கூடாது என நினைத்தேன். விஜய் சேதுபதியும் என்னுடன் படம் பண்ண விருப்பமில்லை. ஆனால் அப்படி இருந்த நாங்கள் தற்பொழுது ஒன்றாக இணைந்து படத்தை உருவாக்கியுள்ளோம்" என கூறியுள்ளார்.


