TamilsGuide

விவாகரத்துகள் அதிகரிப்பது ஏன்? இதுதான் தலைவன் தலைவி படத்தின் கதை - இயக்குனர் பாண்டிராஜ்

பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன், தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் ரோஹன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாயகன் விஜய் சேதுபதி பேசுகையில், ' இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது ஏராளமான சண்டை, சச்சரவுகள் இருந்தன. அதற்கு இடையில் தான் இப்படத்தின் பணி தொடங்கியது. படத்தின் இயக்குநரும், நாயகனும் ஒன்று சேர்ந்த தருணம் இருக்கிறதே, அதை நாங்களே எதிர்பார்க்கவில்லை.

இவருடன் இணைந்து பணியாற்றக்கூடாது என்று அவரும், இவரது இயக்கத்தில் பணியாற்றக் கூடாது என்று நானும் இருந்த காலகட்டம் அது. இரண்டு பேருக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் இல்லை. அதனால் அழகான தருணத்தில் ஒரு சிறிய பூ எப்படி இயல்பாக மலருமோ, அதேபோல் எங்களுக்கு இடையேயான கோபம் மறைந்து, அன்பு மலர்ந்தது. அதன் பிறகு எல்லா விஷயங்களும் படபடவென நடந்தன.

நித்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் இப்படி ஒரு வேடத்தில் அவர்களுடன் இணைந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அந்த கதாபாத்திரத்தில் நித்யாவை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க இயலாது. இந்த படம் ஒரு ஃபுல் பேக்கேஜ் ஃபேமிலி என்டர்டெய்னர். படத்தை பார்க்கும் போது அனைவரும் ரசிப்பார்கள்,'' என்றார்.

நடிகை நித்யா மேனன் பேசுகையில், 'இந்தப் படத்தில் பணியாற்றியது என்னுடைய வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோசமான அனுபவம். இந்த படத்தைப் பற்றி எனக்கு அதிக நம்பிக்கையும் இருக்கிறது. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது,'' என்றார்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், ''ஏறத்தாழ மூன்றரை வருடங்களுக்கு பிறகு பத்திரிகையாளர்களாகிய உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

'தலைவன் தலைவி' என்ற இந்தப் படத்தின் தலைப்பு தோன்றிய தருணங்களும் அற்புதமானது. இந்த படத்திற்கான கதை தோன்றிய சம்பவங்களும் அழகானது. ஒரு உண்மை சம்பவத்திலிருந்து இந்த கதையை எழுதி இருக்கிறேன். என் மகனுடைய பிறந்தநாள் விழாவிற்காக குலதெய்வ ஆலயத்திற்கு சென்ற போது நான் சந்தித்த இரண்டு கதாபாத்திரங்கள் தான் ஆகாச வீரன் - பேரரசி.

நேரில் பார்த்ததை படமாக எடுக்க முடியாது. ஆனால் இப்படி இருந்தால். எப்படி இருக்கும்? என்ற ஒரு கேள்விதான் இந்த கதாபாத்திரம். அதன் பிறகு இதை எழுதத் தொடங்கினேன். எழுத எழுத அது வேறு ஒன்றாக மாற்றம் பெற்றது. அதை எழுதும் போது தான் ஆகாச வீரன் எனும் கதாபாத்திரத்தின் மதிப்பு உயர்ந்தது. ஏனென்றால் ஆகாச வீரன் சிரிக்க வைப்பான்.. அழ வைப்பான்... டார்ச்சர் செய்வான்... இவன் எந்த மாதிரியான கேரக்டர் என்று வரையறுக்க முடியாது.

பொதுவாக ஹீரோ கேரக்டர் என்றால்.. அதற்கென்று ஒரு வரையறை இருக்கும். இதில் எந்த வரையறையும் இல்லாத ஒரு கதாபாத்திரம் தான் ஆகாச வீரன். இந்த கேரக்டரை எல்லா ஹீரோக்களாலும் செய்திட இயலாது.இந்த கேரக்டரை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்திட இயலும்.

படப்பிடிப்பு தளத்தில் அவர் செய்த ஒவ்வொரு விசயத்தையும் அனைவரும் ரசித்தோம். படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி பரோட்டாவை தயாரிப்பார். சாக்லேட் பரோட்டா... வாட்டர்மெலன் பரோட்டா.. என வகை வகையாக கண்டுபிடித்து தயாரிப்பார். அதுவும் சுவையாக தான் இருக்கும்.

முதல்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இந்த திரைப்படத்தில் விவாகரத்தை பற்றி பேசி இருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் விவாகரத்துகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. ஏன்? என்ற ஒரு கேள்விதான் இப்படத்தின் கதை. இந்தப் படம் வெளியான பிறகு விவாகரத்திற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கும் பலரும் யோசிப்பார்கள்.

இந்தப் படம் வெளியான பிறகு'தலைவன் தலைவி' வெளியான பிறகு விவாகரத்திற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கும் பலரும் யோசிப்பார்கள் - இயக்குனர் பாண்டிராஜ் குறித்து ஏதேனும் முடிவு செய்திருந்தால்.. அதற்கு செல்ல வேண்டுமா? என யோசிப்பார்கள். அந்த யோசனையை இந்த படம் வழங்கும் என்று நான் நம்புகிறேன்'' என்றார். 
 

Leave a comment

Comment