TamilsGuide

தீவு பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்! அமைச்சர் சந்திரசேகர்

யாழ்ப்பாணத்தில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடல்போக்குவரத்து சேவை வழங்கும் படகுகளின் தரம் மற்றும் முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியன தொடர்பில் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுமாறு பொலிஸ் மற்றும் கடற்படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுலாப்பயணிகளை ஏற்றும் சிறிய ரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் பயணிகள் 12 பேர் 02 பணியாளர்கள் என 14 பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சேதமடைந்த படகில் இருந்த பயணிகளை விரைந்து மீட்ட பணியாளர்களுக்கும் கடற்படையினருக்கு தனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

மேலும், கடல் பயணத்தின்போது பின்பற்ற வேண்டிய முன்பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் உரிய அறிவுறுத்தல்கள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளதுடன் அவை முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment