இந்தியாவின், தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் தவித்த தமிழ்நாட்டிற்கு அகதியாக சென்ற இலங்கைத் தமிழர் ஒருவரை இந்திய கடலோர காவல் படையினர் நேற்றைய தினம் மீட்டு மரைன் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் மூன்றாம் மணல் திட்டில் இலங்கை தமிழர் ஒருவர் நிற்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து இந்திய கடலோர காவல் படை முகாமுக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டிற்கு சென்ற இந்திய கடலோர காவல் படையினர் அங்கு மீனவர்கள் கொடுத்த தகவலுக்கு அமைய நின்று கொண்டிருந்த இலங்கை தமிழரை பத்திரமாக மீட்டு தனுஷ்கோடிக்கு அடுத்த அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து குறித்த நபரை ராமேஸ்வரம் மரைன் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஒப்படைக்கப்பட்ட இலங்கை தமிழரை மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
குறித்த விசாரணையில் குறித்த நபர் மட்டக்களப்பு ஏறாவூர்பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கியோசன் எனத் தெரியவந்தது.
கடந்த 1990 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற கியோசனின் பெற்றோர். வேலூர் அணைக்கட்டு முகாமில் தங்கியிருந்த நிலையில் 1997 ஆம் ஆண்டு கியோசன் தமிழகத்தில் பிறந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் 2012 ஆம் ஆண்டு கியோசன் அக்காவின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் இலங்கை வந்து மீண்டும் தமிழகம் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மட்டக்களப்பில் தனது அப்பாவுக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்வதற்காக விமானம் மூலம் இலங்கை வந்துள்ளார்.
நிலங்களை விற்று விட்டு மீண்டும் விமானம் மூலம் தமிழகத்திற்கு திரும்பி வர விசா கிடைக்காததால் கியோசன் சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகம் வருவதற்காக புதன்கிழமை இரவு மன்னார் கடற்கரையில் இருந்து ரூ.50 ஆயிரம் கொடுத்து படகொன்றில் புறப்பட்டு நள்ளிரவு தனுஷ்கோடி மூன்றாம் மணல் திட்டில் வந்து இறங்கியுள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் மத்திய, மாநில உளவுத்துறையினர் கியோசனை விசாரணை நடத்திய பின்னர் கியோசன் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


