இந்தியாவின் தரம்சாலாவில் தஞ்சமடைந்துள்ள திபெத்திய பௌத்தம மத தலைவரான 14-வது தலாய் லாமா தனது 90-வது பிறந்தநாளையொட்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், 600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை தனது மறைவுக்குப் பிறகும் தொடரும் என்றும், உரிய நடைமுறைகளின்படி, திபெத்திய புத்த மதத்தினருக்குத் தலைமை தாங்கும் அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவித்தார்.
குறிப்பாக "சீனாவின் தலையீடு இல்லாமல், தனது வாரிசைத் தேர்வு செய்வதற்கான முழு அதிகாரமும் காடன் ஃபோட்ராங் அறக்கட்டளைக்கு (Gaden Phodrang Trust) மட்டுமே உண்டு" என்று தலாய் லாமா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தலாய் லாமாவின் வாரிசு சீன மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், சீன சட்டங்கள், மதச் சடங்குகள் மற்றும் வரலாற்று மரபுகளுக்கு இணங்க வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.


