TamilsGuide

படகு விபத்துக்கள் குறித்து ஆராய விசேட குழு

மீன்பிடி படகு விபத்துக்கள் தொடர்பான தொடர்ச்சியான சம்பவங்களை ஆராய்வதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட விபத்துகளுக்கான காரணங்கள், அவற்றுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து கவனம் செலுத்தும் நோக்கில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மைய நாட்களில் ஏற்பட்ட மூன்று மீன்பிடி படகு விபத்துகளில் ஐந்து மீனவர்கள் இறந்தனர்.

மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பல நாள் மீன்பிடி படகு ஒன்று பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

நான்கு மீனவர்கள் டிங்கி படகின் உதவியுடன் தப்பியுள்ளனர்.

எனினும், இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் உடல் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

பேருவளை, மொரகல்ல பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடி படகில் இருந்த இரண்டு மீனவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், அவர்களின் சடலங்கள் நேற்று காலை பெந்தர கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெவிநுவர பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற “தினேஷ் – 4” என்ற பல நாள் மீன்பிடி படகு வணிகக் கப்பலுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் காணாமல் போன மீனவரின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கடற்படை தெரிவித்துள்ளது.

மீன்பிடிக் கப்பல் ஒரு வணிகக் கப்பலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது, மேலும் அதில் இருந்த 6 மீனவர்களில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

இந்த நிலையிலேயே மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment