ஒன்ராறியோ முதியோர் மாதத்தைக் கொண்டாடும், ஆரோக்கியமான, சுறுசுறுப்பான முதுமையை ஆதரித்து சமூகத்தை ஒன்றிணைக்கும் முதலாவது ஸ்கார்பரோ முதியோர் கண்காட்சி
‘சுறுசுறுப்பான வாழ்க்கை, ஆரோக்கியமான முதுமை’ என்ற தொனிப் பொருளில் 2025ஆம் ஆண்டு கொண்டாடப்படும் ‘ஒன்ராறியோ முதியோர் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் ஸ்காபரோ சட்டமன்ற உறுப்பினரும், முதியோர் விவகார, அணுகுமுறை அமைச்சருமான ரேமண்ட் சோ ஏற்பாடு செய்த முதலாம் ஆண்டு முதியோர் கண்காட்சி சீன கலாசார மண்டபத்தில் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினரும், முதியோர் விவகார, அணுகுமுறை அமைச்சருமான ரேமண்ட் சோ, சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான உபகரணங்களையும் சேவைகளையும் உள்ளூர் அமைப்புகள், வணிக நிறுவனங்களிடம் முதியோர் பெறுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். எங்கள் முதியோர் இந்த வாய்ப்புக்களைப் பெற முழுமையாக தகுதியானவர்கள்.’ என்று தெரிவித்தார்.
டொரண்டோ பெருநகரின் சீன கலாசார மையமும், ஸ்காபரோ வர்த்தக சங்கமும் இணைந்து இந்த நிகழ்வை நடத்தியிருந்தன.
இதில் சுமார் 1000 முதியோர் பங்கேற்று பயன்பெற்றிருந்தனர். ஸ்காபரோவில் முதியோருக்கான சேவைகளை வழங்கும் 40 இற்கும் மேற்பட்ட அமைப்புகளும் நிறுவனங்களும் தமது காட்சிக்கூடங்களை அமைத்திருந்தன. குறிப்பாக கண், காது, உடல் பரிசோதனை உள்ளிட்ட சுகாதார சேவைகளும் இங்கு இடம்பிடித்திருந்தன.
மூத்த குடிமக்களின் சமநிலை, பாதுகாப்பு, சுயாதீனம் என்ற தலைப்பிலும் முதியோர் இல்லத்தைத் தேர்ந்தெடுக்கும்போது அறிய வேண்டிய விடயங்கள் என்ற தலைப்பிலும் கருத்தரங்குகள் நடைபெற்றன. அத்துடன் முதியோரை இலக்குவைத்து மோசடியாக பணம் திருடப்படுவதைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று RCMP பொலிசாரினால் வழங்கப்பட்டிருந்தது.
இந்தக் கண்காட்சியில் தமிழ், சீன உள்ளிட்ட பல்வேறு கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன. Frontline Community Centre அமைப்பைச் சேர்ந்த முதியோர் வழங்கிய தமிழ் பாரம்பரிய நடனமான கோலாட்டம், குழு யோகா, சீனர்களின் கலாசார நடனங்கள் உள்ளிட்ட அம்சங்களும் நிகழ்வை வண்ணமயமாக்கின.
இங்கு மேலும் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பனர் ரேமண்ட் சோ, "எமது முதியோரை கொண்டாடுவதில் நான் பெருமைப்படுகிறேன். முதியோர் உண்மையிலேயே நமது சமூகத்தின் இதயம். அவர்களின் அறிவு, அனுபவம், பங்களிப்பு சிறந்த ஒன்ராறியோவை வடிவமைத்துள்ளது. ஆரோக்கியமான, சுறுசுறுப்பான மற்றும் சுதந்திரமான வாழ்க்கையை வாழ உதவும் முக்கிய தகவல்களையும் வளங்களையும் அவர்களுக்கு வழங்குவதற்காக இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. 'சுறுசுறுப்பான வாழ்க்கை, ஆரோக்கியமான முதுமை' என்ற தொனிப் பொருளில் இந்த ஆண்டு ஒன்ராறியோ முதியோர் மாதம் கொண்டாப்படுகிறது. இதனுடன் இணைந்து முதியோருக்கு உடல், மன ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்த அனைவரையும் ஊக்குவிக்கிறோம்," என்று கூறினார்.
"எங்கள் மையத்தில் இந்த முக்கியமான நிகழ்வை இணைந்து நடத்துவதில் நாங்கள் பெருமைகொள்கிறோம்" என்று டொராண்டோ பெருநகரின் சீன கலாசார மையத்தின் தலைவர் ஆலன் லாம் கூறினார். "எங்கள் பல்நோக்கு மண்டபம் நிறைந்திருப்பதைப் பார்க்கும் போது உற்சாகமாக இருக்கிறது. இது வெறும் கண்காட்சியாக மட்டுல்லாமல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழவதற்கான வளங்களையும் அவர்களுக்குப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. நல்வாழ்வு, கற்றல் மற்றும் இணைப்புக்கான ஒரு சிறந்த இடமாக இது இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் சமூகம் ஒன்று சேர்ந்து ஒருவரையொருவர் மேம்படுத்தவும் ஆதரிக்கவும் உந்துசக்தியாக அமைகிறது."
"நாங்கள் முதியோர் மாதத்தைக் கொண்டாடும் இந்த வேளையில் ஸ்காபரோ வணிக சங்கம், இந்த கண்காட்சியில் ஒரு சமூக பங்காளியாக பங்கேற்பதில் பெருமை கொள்கிறது." என்று ஸ்காபரோ வணிக சங்கத்தின் தலைவர் ரியான் சோமர் கூறினார். "இந்த நிகழ்வு நமது முதியோர்களுக்கு சேவை செய்யும் பணிகளை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், சமூக இணைப்பின் சக்தியையும் எடுத்துக்காட்டுகிறது. நமது முதியோரை ஆதரிப்பதும் அவர்களை பங்களிக்கச் செய்வதும் குடும்பங்களை வலுப்படுத்துவது மட்டுமன்றி உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பங்களிக்கிறது." என்று தெரிவித்தார்.
கண்காட்சிக்கு வந்திருந்த முதியோருக்கு மதிய உணவு (இலகு) வழங்கப்பட்டதுடன் கண்காட்சிக் கூடங்களில் முதியோர் தமக்குத் தேவையான தகவல்களையும் பெற்றுப் பயனடைந்தனர்.








படங்கள் இணைப்பு :
படம் 1 : அமைச்சர் சோ, சீனா தாய்-சீ நிகழ்வில் பங்கேற்ற போது
படம் 2 : FCC அமைப்பின் முதியோர் யோகா நிகழ்வு
படம் 3 : கண்காட்சிக் கூடத்தில் முதியோர் சுகாதார பரிசோதனை செய்தபோது
படம் 4 : ஸ்காபரோ வர்த்தக் சங்கத் தலைவருக்கு சானறிதழ் வழங்கிய போது
படம் 5 : சுமார் 1000 முதியோரும் 40இற்கு மேற்பட்ட அமைப்புக்களும் பங்கெடுத்த கண்காட்சியின் ஒருபகுதி
படம் 6 : அமைச்சர் சோ நிகழ்வில் உரையாற்றிய போது
படம் 7 : கண்காட்சிக்கு இணை அனுசரணை வழங்கிய சீன கலாசார மையத்தினருக்கு ஸ்காபரோ ஏஜின்கோர்ட் சட்டமன்ற உறுப்பினர் ஆரிஸ் பாபிகியன், அமைச்சர் சோ ஆகியோர் நற்சான்றிதழ் வழங்கியபோது
படம் 8 : ஆரம்பத்தில் சீன கலாசார மையத்தின் அங்கத்தவர்கள் சீன வாத்திய இசை நிகழ்வை வழங்கிய போது
முற்றும் –
ஊடகத் தொடர்பு
ஸ்காபரோ வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ரேமண்ட் சோ அலுவலகம்
416-988-9314 | raymond.cho@pc.ola.org


