தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம் கலந்துக் கொண்டார்.
அண்மையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீடியோ வைரலானது. இதையடுத்து பலரிடம் உதவி கேட்டார். சரத்குமார், கமல், சிரஞ்சீவி என பலர் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தனர்.
தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், நடிகர் பொன்னம்பலம் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், "மீண்டும் சிறுநீரக தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தேன். கமல், தனுஷ், ரவி மோகன், சிம்பு என்று எல்லோரும் உதவி செய்தார்கள். அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றி. எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று உருக்கமாக பேசியுள்ளார்.


