TamilsGuide

அமெரிக்கா வரை பாய்ந்து தாக்கும் அணுசக்தி ஏவுகணையை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை ரிப்போர்ட்

பாகிஸ்தான் மிகவும் ரகசியமான முறையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணைகளை உருவாக்கி வருவதாக அமெரிக்க உளவுத்துறை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த ஏவுகணைகள் 5,500 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை அமைப்பு அறிக்கையில், இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்துர்'க்குப் பிறகு, சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் தனது ஆயுதக் களஞ்சியத்தை கணிசமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் பல முக்கிய பகுதிகளை குறிவைக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பாகிஸ்தான் ரகசியமாக உருவாக்கி வருகிறது.

பாகிஸ்தான் இதுபோன்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கவோ அல்லது வாங்கவோ முயற்சித்தால், அந்த நாடு எதிரியாக இக்கருதப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்ததாக அறிக்கை கூறுகிறது.

அமெரிக்கா, தனது நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அல்லது அணு ஆயுதங்களை வைத்திருக்கும் எந்தவொரு நாட்டையும் அதன் எதிரியாக அறிவிக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது. தற்போது, ரஷியா , சீனா மற்றும் வட கொரியாவை அமெரிக்கா தனது எதிரி நாடுகளாகக் கருதுகிறது.

சிறிது காலமாக, பாகிஸ்தான் முக்கியமாக குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

தற்போது அந்நாட்டிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBM) இல்லை. 2022 ஆம் ஆண்டில், பாகிஸ்தான், மேற்பரப்பு முதல் மேற்பரப்பு வரையிலான இடைநிலை ஏவுகணையான ஷாஹீன்-III ஐயும், 2023 ஆம் ஆண்டில், இடைநிலை ஏவுகணையான கௌரியையும் வெற்றிகரமாக சோதித்தது.

இதற்கிடையில், ஆபரேஷன் சிந்தூரின் போது 450 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் அப்தாலி ஆயுத அமைப்பு ஏவுகணையை (மேற்பரப்பில் இருந்து மேற்பரப்புக்கு தாக்கும் ஏவுகணை) சோதித்ததாக பாகிஸ்தான் அறிவித்தது.

கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் நீண்ட தூர ஏவுகணைத் திட்டத்தின் மீது அமெரிக்கா பல தடைகளை விதித்தது. ஏவுகணைத் திட்டத்தை மேற்பார்வையிடும் அரசுக்குச் சொந்தமான நிறுவனமான தேசிய மேம்பாட்டு கழகம் மற்றும் மூன்று நிறுவனங்களுடன் வணிகம் செய்வதை அமெரிக்க நிறுவனங்கள் தடை செய்தது.

பாகிஸ்தான் இத்தகைய ஏவுகணைகளை உருவாக்குவது அதன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இருப்பினும், அமெரிக்கா பாரபட்சமாக தங்களுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
 

Leave a comment

Comment