கார்த்திக் நேத்தா (Karthik Netha) ஒரு பிரபலமான தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். அவர் 96, நெடுஞ்சாலை, திருமணம் எனும் நிக்கா, டியர் காம்ரேட், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். புகழ்பெற்ற பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர்.
கார்த்திக் நேத்தா 2018-ம் ஆண்டு 96 திரைப்படத்திற்காக ஆனந்த விகடன் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். 2019 இல் பில்ம்ஃபேர் விருது (தென்னிந்தியா) மற்றும் நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த பாடலாசிரியர் விருதையும் வென்றார். அவரது பாடல்கள் ஆழமான உணர்வுகளையும், தமிழின் இலக்கிய அழகையும் பிரதிபலிக்கின்றன.
சமீபத்தில், அவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக் லைஃப் படத்தில் அஞ்சு வண்ணப் பூவே பாடலை எழுதியுள்ளார். இது ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்றது.
இந்நிலையில் தனது 100-வது திரைப்படத்திற்கு பாடல் எழுதியது குறித்து பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,
பாட்டு எழுத சென்னைக்கு வந்து பாதைகள் பல மாறிய கவிஞன் எனக்கு வெளிவர இருக்கிற 'GOOD DAY" திரைப்படம் நூறாவது படம். 2005 இல் தொடங்கிய பயணம். இருபது ஆண்டுகளில் நூறு படங்கள் என்பதும் நூற்றிச் சொச்சம் பாடல்கள் என்பதும் பெரும் சாதனை ஒன்றுமில்லை. ஆனால் இந்தப் பயணத்தில் காலமும் வாழ்க்கையும் கற்றுத் தந்திருப்பவை ஏராளம் ஒரு PESSIMIST ஐ OPTIMIST ஆக மாற்றிய மனிதர்களின் அன்பிற்கும் வாழ்க்கையின் அருளுக்கும் என்றும் நன்றி.
வாய்ப்பளித்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடிய பாடகர்கள், பத்திகள் பல எழுதிப் பரவலாகக் கொண்டு சேர்ந்த பத்திரிகையாளர்கள், பாடல்களில் கவிதை செய்ய விழையும் என் போன்றோர்க்குப் பெரும் ஊக்கமளித்து வரவேற்கும் மக்கள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
பெரிதினும் பெரிது செய்ய விழைவேன். இந்நேரத்தில் கண்ணதாசனையும் அறிவுமதி அண்ணனையும் என்னன்பு நா. முத்துக்குமாரையும் தழுவிப் பணிகிறேன்.
குடும்பத்தார்க்கு எனது நன்றி.
'என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தை யான் பாலித்திடல் வேண்டும்' என்ற பாரதியைப் போல நானும் பாடல் வழி. எழுத்தின் வழி பெரும்பிழம்பாய்ப் பிறப்பெடுக்கவே விரும்புகிறேன்.
வழிப்போக்கர்களின் நினைவில் ஒரு கதையாக, வாழ விரும்புவோரின் அகத்தில் ஓர் ஊக்கப்பாடலாக நின்று நிலைபெற அருள்வாய் தமிழ்ப் பேரணங்கே என பதிவிட்டிருந்தார்.


