விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'மார்கன்'. இப்படம் விஜய் ஆண்டனியின் 12-வது திரைப்படமாகும். விஜய் ஆண்டனியின் தயாரிப்பு மற்றும் இசையமைப்பில் உருவான இப்படத்தை லியொ ஜான் பால் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரிகடா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இதனை தொடர்ந்து இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கான புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 'மார்கன்' படத்தின் புரோமோஷன் நேற்று மதுரையில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, படக்குழுவினர் என பலரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் விஜய் ஆண்டனி கூறியதாவது:- இயக்குனர் உடனான நட்பின் அடிப்படையில் 'மார்கன்' படத்தை நானே தயாரித்துள்ளேன். திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது. சிகரெட் பிடிப்பதும் போதைப் பழக்கம் தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைபொருள் பழக்கம்.
நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது. அதைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை. நான் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. நடிகர்கள் நாட்டை ஆளக்கூடாது என விதியல்ல. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி என ஆண்டுள்ளனர். மக்கள் ஆதரவு இருந்தால் ஆளலாம். 'சக்தி திருமகன்' திரைப்படத்திற்கு பின்பு அனைத்து நடிகர்களுக்கும் இசையமைக்க திட்டமிட்டுள்ளேன். எத்தனை ஏஐ வந்தாலும் இதயத்தை தொடும் பாடல்களை உருவாக்க முடியாது என்றார்.


