TamilsGuide

இன்று இரண்டாவது நாளாகவும் செம்மணியில் தொடரும் அணையா விளக்கு போராட்டம்

தமிழ் மக்கள் பலரது உடல்களைத் தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்துச் செல்கின்றன.

எனினும் இதற்கு உரிய தீர்வுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. எனவே குறித்த விடயத்தை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதன் மூலம் உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ‘அணையா தீபம்’ எனப்படும் போராட்டம்” நேற்று(23) செம்மணியில் 1996 களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகனாதன் தலைமையில், முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டத்தில் சமயத் தலைவர்கள்,அரசியல் தலைவர்கள்,அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

நேற்று காலை 10.10 மணியளவில் ஆரம்பிக்கப்பட குறித்த போராட்டமானது 23,24,25 ஆகிய 3 நாட்களுக்கு அகிம்சை வழியில் முன்னெடுக்கப்படுகிறது.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை தேடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை, நாளை யாழ் வருகை தரவுள்ள ஐ.நா உயர் அதிகாரியின் பார்வைக்கு பிரச்சினையின் ஆழத்தை வலியுறுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு தமிழ் மக்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகனாதன் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment