ஃபோர்டோ உட்பட மூன்று ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் அணுசக்தி கனவைத் தகர்த்ததாக அமெரிக்கா கூறிய போதிலும், குறிப்பிடத்தக்கச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஈரான் கூறுகிறது.
மறுநாள் (நேற்று) இஸ்ரேல், அமெரிக்கா தாக்கிய அதே ஃபோர்டோஅணுசக்தி தளத்தை தாக்கியது. இதனுடன் துணை ராணுவப் புரட்சிகர காவல்படை தலைமையகம், பாலஸ்தீன சதுக்கம், துணை ராணுவப் பசிஜ் தன்னார்வப் படை கட்டிடம் மற்றும் எவின் சிறைச்சாலையையும் தாக்கியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலை உறுதிப்படுத்திய ஈரான், ஃபோர்டோவில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பது தெளிவாக குறிப்பிடவில்லை.
புஷேர், அஹ்வாஸ், யாஸ்த் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள ஏவுகணை சேமிப்பு வசதிகள், ஏவுகணை ஏவுதளங்கள், ட்ரோன் சேமிப்பு வசதிகள் மற்றும் வான் பாதுகாப்பு உபகரண உற்பத்தி வசதி ஆகியவற்றைத் தாக்கியதாகவும், இதனால் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் இஸ்ரேல் விமானப்படைத் தலைவர் மேஜர் ஜெனரல் டோமர் பார் தெரிவித்தார்.
யாஸ்டில் உள்ள இமாம் ஹுசைன் ஏவுகணை தளத்தைத் தாக்கி கோர்ராம்ஷஹர் ஏவுகணைகளை அழித்ததாகவும் அவர் கூறினார். 50 விமானப்படை போர் விமானங்களை இந்த தாக்குதலில் இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக ஈரானிய வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல் அவிவ் மற்றும் ஹைஃபா நகரங்களைத் தவிர, இஸ்ரேலின் பிற நகரங்களையும் ஏவுகணைகள் தாக்கியுள்ளன.
இதற்கிடையே கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படைத் தளத்தின் மீதும் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.


