TamilsGuide

போர் பிரச்சனைகளை தீர்க்காது, மாறாக காயங்களை மேலும் ஆழப்படுத்தும் - போப் லியோ

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலால் மூன்றாம் உலக போர் உருவாகி விடுமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், போர்க் கொடூரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று போப் லியோ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "போர் பிரச்சினைகளைத் தீர்க்காது. மாறாக, அது அவற்றைப் பெருக்கி, மக்களின் வரலாற்றில் ஆழமான காயங்களை ஏற்படுத்துகிறது. அவை குணமடைய தலைமுறைகள் ஆகும். எந்த ஆயுத வெற்றியும் தாய்மார்களின் வலியையோ, குழந்தைகளின் பயத்தையோ அல்லது பறிக்கப்பட்ட அவர்களின் எதிர்காலத்தையோ ஈடுசெய்ய முடியாது. பேச்சுவார்த்தைகள் மூலம் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். நாடுகள் தங்கள் எதிர்காலத்தை வன்முறை மற்றும் இரத்தக்கறை படிந்த மோதல்களால் அல்ல, அமைதிப் பணிகளால் வடிவமைக்கட்டும்!

இன்று, மனிதகுலம் எப்போதும் இல்லாத அளவுக்கு அமைதிக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது பொறுப்பும் பகுத்தறிவும் தேவைப்படும் ஒரு கூக்குரல். மேலும் இது ஆயுதங்களின் இரைச்சலால் அல்லது மோதலைத் தூண்டும் வார்த்தைகளால் மூழ்கடிக்கப்படக்கூடாது.

சர்வதேச சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் போரின் துயரத்தை சரிசெய்ய முடியாத ஒரு பிரச்சனையாக மாறுவதற்கு முன்பு அதைத் தடுக்கும் தார்மீகப் பொறுப்பைக் கொண்டுள்ளனர். மனிதர்களின் கவுரமான நடத்தை ஆபத்தில் இருக்கும்போது 'தொலைதூர' மோதல்கள் எதுவும் இல்லை.

மத்திய கிழக்கிலிருந்து, குறிப்பாக ஈரானிலிருந்து, தொடர்ந்து அச்சமூட்டும் செய்திகள் வெளிவருகின்றன. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் உள்ளிட்ட இந்த துயரமான பின்னணியில், குறிப்பாக காசா மற்றும் பிற பிரதேசங்களில், போதுமான மனிதாபிமான உதவிக்கான தேவை அதிகரித்து வரும் அவசரநிலையில், மக்களின் அன்றாட துன்பங்கள் மறக்கப்படும் அபாயம் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். 

Leave a comment

Comment