மத்திய கிழக்கு உண்மையாகவே பற்றியெரியத் தொடங்கிவிட்டது. யூன் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈரானின் நிலைகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் புதிய மோதலுக்கான வாசலைத் திறந்து விட்டுள்ளது. ஈரான் அணுகுண்டுகளைத் தயாரிப்பதைத் தடுப்பதே தனது தாக்குதலின் இலக்கு என இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்துள்ள போதிலும் அதன் உண்மையான இலக்கு ஈரானின் படை பலத்தை அழிப்பதுவும், அந்த நாட்டில் மேற்குலகு சார்பான ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு வழிகோலுவதுமே என்பதைப் புரிந்து கொள்ள பூகோள அரசியல் அறிவு எதுவும் தேவையில்லை.
தற்போதைய தாக்குதல் ஒன்றும் தற்செயல் நிகழ்வல்ல. அது மாத்திரமன்றி ஈரானின் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுப்பது இதுவே முதன்முறையும் அல்ல. இதற்கு முன்னர் பல தடவைகளில் ஈரானின் மீது விமானத் தாக்குதல்கள், ஏவுகணைத் தாக்குதல்கள், ட்ரோன் தாக்குதல்கள், குண்டுத் தாக்குதல்கள், இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள் என இஸ்ரேலின் தாக்குதல் பட்டியல் நீளமானது. கடந்தகாலத் தாக்குதல்களின் காரணகர்த்தா இஸ்ரேல் என்பது பகிரங்கமாகத் தெரிந்த போதிலும் அவற்றுக்கு உரிமைகோர இஸ்ரேல் முன்வரவில்லை. ஆனால், இந்தத் தடவை இஸ்ரேல் தனது தாக்குதல்களுக்குப் பகிரங்கமாகவே உரிமை கோரியிருந்தது.
அதேசமயம், கடந்த காலங்களில் தனது நண்பர்கள் மூலம் பதிலடி கொடுத்துவந்த ஈரான் தற்போது நேரடியாகவே களத்தில் இறங்கி பதிலடி கொடுத்திருக்கிறது. மத்திய கிழக்கில் ஈரானின் நண்பர்கள் எனக் கருதப்பட்ட பலஸ்தினத்தில் உள்ள ஹமாஸ், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆகிய இயக்கங்கள் பெருமளவில் ஒடுக்கப்பட்டுள்ள நிலையிலும், சிரியாவில் ஈரான் ஆதரவு நிலைப்பாட்டில் ஆட்சி புரிந்த அல் அசாத் தலைமையிலான ஆட்சி அகற்றப்பட்டுள்ள நிலையிலும் ஈரான் நேரடியாகக் களமிறங்கியே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
அதேவேளை, ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளும் அசாத் அரசாங்கமும் அரங்கைவிட்டு அகற்றப்பட்ட பின்னால் - தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள - ஈரான் மீது தாக்குதல் நடத்துவதே மேற்குலகின் நிரந்தர ஆதரவைக் கொண்டுள்ள இஸ்ரேலின் நீண்டகாலத் திட்டம் என்பது தற்போது புரிகிறது. இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு அமெரிக்கா நேரடியாகவே தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. வார இறுதியில் கனடாவில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 'தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமையை' தாம் ஆதரிப்பதாக மேற்குலகம் அறிவித்துள்ளது.
தானாக, எந்தவித ஆத்திரமூட்டல்களும் இல்லாமல் இஸ்ரேல் ஆரம்பித்த தாக்குதல்களில் 'தற்காத்துக் கொள்ள' என்ற பதம் எப்படிப் பொருந்தும் எனப் புரியவில்லை. ஒருவேளை இஸ்ரேல் தொடர்ச்சியாகக் கூறி வருவதைப் போன்று ஈரான் ஆணுவாயுதங்களைத் தயாரிக்கும் முயற்சியில் உண்மையாகவே ஈடுபட்டு வருகிறது என ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால்கூட, அவ்வாறு தயாரிக்கப்படும் அணுகுண்டுகள் இஸ்ரேலுக்கு எதிராகத்தான் பாவிக்கப்படும் என்பதற்கு ஆதாரம் என்ன இருக்கிறது? ஈரான் அணுகுண்டு உற்பத்தி செய்வதை எப்பாடுபட்டாவது தடுத்துவிட வேண்டும் எனப் பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல் மாத்திரம் ஏன் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறது? ஏனைய மத்திய கிழக்கு நாடுகள் எதுவும் அதுபற்றி ஏன் அலட்டிக் கொள்வதில்லை?
இத்தனைக்கும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அணுவாயுதங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒரேயொரு நாடாக இஸ்ரேல் மாத்திரமே இருந்து வருகிறது. அவ்வாறு இஸ்ரேல் அணுகுண்டுகளை வைத்திருப்பதை பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகள் தங்களுக்கு அச்சுறுத்தலாக ஏன் நினைப்பதில்லை?
உலகில் ஒருசில நாடுகளே அணுகுண்டுகளை தம்வசம் வைத்திருக்கின்றன. அவற்றுள் பிரதான நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் நாடுகளாகவே எப்போதும் இருந்து வருகின்றன. இருந்தும், ஈரானின் உத்தேச அணுகுண்டுக்கு இஸ்ரேல் அஞ்சக் காரணம் என்ன?
உலகம் விடை தெரிந்து கொள்ள வேண்டிய கேள்விகள் இவை.
தற்போதைய தாக்குதல்களில் இஸ்ரேல் ஆரம்பக்கட்ட வெற்றிகள் சிலவற்றைப் பெற்றுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. ஈரானிய அணுசக்தித் துறையின் முக்கிய விஞ்ஞானிகள், படைத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் என ஈரானியத் தரப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள், எண்ணை வயல்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் இஸ்ரேலின் கை ஓங்கியுள்ளமையைப் பார்க்க முடிகின்றது.
மறுபுறம் ஈரான் நிகழ்த்திய பதில் தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த நாட்டில் நிலவும் கடுமையான தணிக்கை நடைமுறை காரணமாக பாதிப்புகளின் தன்மையை முழுமையாக அறிந்துகொள்ள முடியாமல் உள்ளது. ஆனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை உணர முடிகின்றது. இதுவரையான தாக்குதல்கள் முழுமையான பதில் தாக்குதல்கள் அல்ல, இனித் தொடரப் போகின்றவையே முறையான தாக்குதல்கள் என ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் இந்த அறிவிப்பானது வெறும் வாய்ச்சவடாலா அல்லது உண்மையிலேயே கடுமையான தாக்குதல்கள் இனிமேல்தான் காத்திருக்கின்றதா என்பது போகப் போகத் தெரிந்துவிடும்.
ஈரான் மீது தாக்குதல்களை நிகழ்த்துவதால் அணுகுண்டு உற்பத்தியில் இருந்து அந்த நாட்டை முற்றாகத் தடுத்துவிட முடியுமா? தற்போதைய தாக்குதல்கள் ஈரான் அரசாங்கம் மீதான மக்கள் ஆதரவை அதிகரிக்கச் செய்திருக்கின்றன என்கின்றன அங்கிருந்து வரும் செய்திகள். அணுகுண்டு தங்களைப் பாதுகாக்காது என நினைத்திருந்த மக்கள் கூட, தங்கள் நாடு அணுகுண்டுகளை உற்பத்தி செய்வது ஒன்றே தற்காப்புக்கான வழி என நினைக்கத் தொடங்கியிருப்பார்கள் என நம்பலாம்.
ஈரானிய மக்கள் மாத்திரமன்றி பிராந்தியத்தில் உள்ள அரபு நாடுகளின் மக்கள் கூட இஸ்ரேலை வெறுக்கத் தொடங்கியிருப்பதைப் பார்க்க முடிகின்றது. அத்தோடு பிராந்தியத்தில் உள்ள நாடுகளும் ஈரான் முற்றாக ஒடுக்கப்படுவதை விரும்பவில்லை என்பதை வெளிவரும் செய்திகள் கோடிகாட்டி நிற்கின்றன.
உள் நாட்டிலும் தனது குடிமக்களைப் பாதுகாக்க முடியாமல், அயல் நாடுகளிலும் கூட அவர்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு சூழலைத் தோற்றுவித்திருக்கும் நிலையை ஈரான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்கள் ஏற்படுத்தியிருக்கின்றன. மோதல்கள் நீளுமானால் எதிர்காலத்தில் உலக நாடுகள் முழுவதிலும் இஸ்ரேலியர்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு நிலை உருவாகக் கூடும்.
தற்போதைய தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும் மூன்றாம் உலகப் போர் ஒன்றுக்கு உலகத்தை அழைத்துச் சென்றுவிடுமோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது. மேற்குலகின் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசில நாடுகளைத் தவிர ஏனைய நாடுகள் பலவும் ஈரான் மீதான் இஸ்ரேலின் ஒருதலைப் பட்சமான தாக்குதல்களைக் கண்டித்துள்ளன. இத்தகைய நாடுகளுள் ஈரான் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டுள்ள வல்லரசு நாடுகளான சீனா மற்றும் ரஸ்யாவும் அடக்கம்.
பதட்டத்தைத் தணிக்கும் வகையில், தாக்குதல்களை நிறுத்தும் நோக்குடன் ராஜதந்திரச் செயற்பாடுகளும் ஒரு பக்கம் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனினும் அத்தகைய முயற்சிகள் வெற்றியளிக்குமா என்பது தெரியவில்லை.
போர் என்று ஒன்று உருவாகிவிட்டால் இரண்டு தரப்பிலும் உள்ள சாதாரண மக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதே யதார்த்தம். அவ்வாறு பாதிக்கப்படக் கூடிய மக்களைக் காப்பாற்றும் நோக்குடனேயே தாம் ஆட்சி புரிவதாகக் கூறும் ஆட்சியாளர்கள், அந்த மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையிலான போர் முயற்சிகளை மேற்கொள்வதை எவ்வாறு புரிந்து கொள்வது?
எவ்வளவு காலத்துக்குப் போர்கள் நீடித்தாலும், போரின் முடிவு எப்போதும் பேச்சுவார்த்தை மேசையிலேயே எட்டப்படுகின்றது. போரின் விளைவாக ஏற்படும் அழிவுகளின் பின்னர் பேச்சுவார்த்தை மேசையில் அமர்வதை விடுத்து, போர் உருவாவதற்கு முன்னரேயே பேச்சுக்களில் ஈடுபடுவதே அறிவார்ந்த செயற்பாடு. ஆனால், போர்வெறி கொண்ட ஆட்சியாளர்கள் அது தொடர்பில் கவனம் அற்றவர்களாகவே வரலாறு நெடுகிலும் உள்ளனர்.
'ராஜதந்திரம் யாதெனில், கையில் கல் கிடைக்கும் வரை பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது' என ஒரு மேற்கோள் உள்ளது. ஈரானின் அணுசக்தி விவகாரத்திலும் இந்த மேற்கோள் பொருந்திப் போவதைக் காண முடிகின்றது. அமெரிக்காவுடன் ஆறாவது சுற்றுப் பேச்சுக்கு ஈரான் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த தருணத்திலேயே இஸ்ரேலின் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
வரலாற்றில் இருந்து பாடம் கற்கத் தவறுபவர்கள், மீண்டும் மீண்டும் தவறு செய்யும் பாரம்பரியமே உலகில் தொடர்கிறது. இத்தகைய போக்கு தொடர்வது உலகிற்கு நல்லதல்ல. ஆனால் உரியவர்களுக்கு அதனை எடுத்துச் சொல்வது யார்?
சுவிசிலிருந்து சண் தவராஜா


