TamilsGuide

எந்தவித ஆவணங்களும் இன்றி சிறைகளில் இருந்து 30 கைதிகள் விடுவிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளில் எந்தவித ஆவணங்களும் இன்றி 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்தது.

இந்நிலையில், சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறைக்கைதிகள் குழு பல்வேறு பிரிவுகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என்பதையும் விசாரனை செய்து வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பொது மன்னிப்பு வழங்கப்பட்ட 37 பேர் விடுவிக்கப்படவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சிறைச்சாலைத் திணைக்களத்தின் விரிவான மறுசீரமைப்பு குறித்து நீதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதுடன் அனைத்து சிறைச்சாலை கண்காணிப்பாளர்களும் எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதே நாளில் பிற்பகல் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தலைமையில் மற்றொரு கலந்துரையாடலும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment