இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த 7 நாளாக தாக்குதல் நீடித்து வருகிறது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானை கடந்த வாரம் இஸ்ரேல் தாக்கிய நிலையில் ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ஈரான் தங்கள் எல்லையில் கொத்து குண்டுகளை ஏவுவதாக இஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. பொதுமக்களுக்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தடை செய்யப்பட்ட குண்டுகளை ஈரான் பயன்படுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரான் ஏவிய ஏவுகணையின் போர்முனை சுமார் 7 கிலோமீட்டர் (4 மைல்) உயரத்தில் உடைந்து, மத்திய இஸ்ரேலிய பிரதேசத்தில் சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்) சுற்றளவில் சுமார் 20 சிறிய குண்டுகளாக வெடித்து சிதறடித்தது.
சிறிய குண்டுகளில் ஒன்று மத்திய இஸ்ரேலில் உள்ள அசோர் நகரில் உள்ள ஒரு வீட்டைத் தாக்கி சேதம் ஏற்படுத்தியதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் இராணுவ நிருபர் இம்மானுவேல் ஃபேபியன் தெரிவித்தார். இருப்பினும், உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை.
வெடிக்காத குண்டுகளின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கும் ஒரு கிராஃபிக் வீடியோவையும் இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டது.
கொத்து குண்டுகள் (Cluster bombs) என்பவை மிகவும் ஆபத்தான ஆயுதமாக வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். ஏவப்படும் ஒரு குண்டு பல சிறிய குண்டுகளாக இலக்கின் மீது விழுந்து வெடிக்கிறது.
இவற்றில் சில உடனடியாக வெடிக்காமல் போகலாம். நீண்ட காலத்திற்குப் பிறகும் அவை வெடித்து பொதுமக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே கொத்து குண்டுகளின் பயன்பாடு குறித்து சர்வதேச அளவில் சர்ச்சை நீடித்து வருகிறது
கொத்து குண்டுகளை உற்பத்தி செய்தல், சேமித்து வைத்தல், மாற்றுதல் மற்றும் பயன்படுத்துவதைத் தடை செய்யும் ஒரு சர்வதேச ஒப்பந்தம் 2008 இல் கையெழுத்தானது. இதில் 111 நாடுகளும் 12 பிற அமைப்புகளும் கையெழுத்திட்டன. இருப்பினும், ஈரானும் இஸ்ரேலும் இந்த ஒப்பந்தத்தில் சேர மறுத்துவிட்டன.
இதற்கிடையில், நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ரஷிய படைகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக அமெரிக்கா 2023 இல் உக்ரைனுக்கு கொத்து குண்டுகளை வழங்கியது. ரஷியாவும் கொத்து குண்டுகளை பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டுகிறது. அமெரிக்கா, ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளும் கொத்து குண்டுகளுக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


