TamilsGuide

உச்சத்தை எட்டும் சண்டை - ஈரானின் உச்சப்பட்ச தலைவர் காமேனிக்கு இஸ்ரேல் குறி?

இஸ்ரேல்- ஈரான் இடையிலான சண்டை 7ஆவது நாளாக நீடித்து வருகிறது. இஸ்ரேலில் உள்ள மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ஈரானில் உள்ள அணு உலை மீது தாக்குதல் நடத்தியது. இந்த அணு உலையில் ரஷியாவைச் சேர்ந்த நிபுணர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதனால் அணுஉலை மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என ரஷியா வலியுறுத்தியுள்ளது.

இரண்டு நாடுகளும் மாறிமாறி ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் சேதத்தை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், ஈரானின் உச்சப்பட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை இருக்க அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். இதன் மறைமுக அர்த்தம் அவரை வீழ்த்துவது.

இந்த கருத்தை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் புறந்தள்ளிவிடவில்லை. "அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இது தொடர்பாக மீடியாவில் பேசுவது சிறந்ததாக இருக்காது. இஸ்ரேல் ராணுவத்திடம், ஈரான் அதிகாரத்தில் யாருக்கும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் தன்மை இல்லை என அறிவுறுத்தியுள்ளேன். நான் பேசாமல் இருக்க விரும்புகிறேன். நீங்கள் நடவடிக்கையை பார்ப்பீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் காமேனிக்கு இஸ்ரேல் குறி வைக்கலாம் எனத் தெரிகிறது.

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் "ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு காமேனி "ஈரான் ஒற்றுமையாக உள்ளது. ஒருபோதும் சரணடையமாட்டோம். அமெரிக்கா தலையீடு செய்தால் சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்" எனத் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் உடன் இணைந்து தாக்குதல் நடத்த டொனால்டு டிரம்ப் தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இஸ்ரேல்- ஈரான் இடையிலான சண்டை மேலும் மோசமான நிலையை எட்ட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
 

Leave a comment

Comment