ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதட்டங்களைத் தொடர்ந்து, மோதலில் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்களில் இஸ்ரேலுடன் இணைவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த புதன்கிழமை அறிவித்தது பதட்டங்களை அதிகரித்தது.
இந்நிலையில் மாஸ்கோவில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, "இந்த கடினமான சூழ்நிலைகளில் அமெரிக்க இராணுவத் தலையீட்டைத் தவிர்க்குமாறு வாஷிங்டனை நாங்கள் வலுவாக எச்சரிக்கிறோம்.
இது உண்மையிலேயே எதிர்பாராத எதிர்மறை விளைவுகளைக் கொண்ட மிகவும் ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும்" என்று கூறினார்.
முன்னதாக, ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடி இராணுவ உதவி வழங்குவதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார்.
ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களால் உலகம் ஒரு பெரிய பேரழிவின் விளிம்பில் உள்ளது என்று ஜகரோவா கவலை தெரிவித்தார்.
2011இல் ஜப்பானின் ஃபுகுஷிமாவில் நடந்த அணுசக்தி விபத்தை குறிப்பிட்ட ஜகரோவா, ஈரானில் உள்ள புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல் செர்னோபில் பாணி பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று ரஷிய அணுசக்தி தலைவர் எச்சரித்துள்ளார். புஷேர் அணுமின் நிலையத்தை ரஷியாவே கட்டித் தந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் ஈரான் பிரச்சனை தொடர்பாக தொலைபேசியில் பேசினார்.
மேலும் இஸ்ரேல் - ஈரான் தலைவர்களுக்கும் இடையே தொலைபேசி மூலம் மத்தியஸ்தம் செய்ய புதின் முன்வந்தார். ஆனால் டிரம்ப் அந்த வாய்ப்பை நிராகரித்தார். "முதலில் ரஷியாவில் உங்கள் பிரச்சினைகளை தீர்க்கவும்" என்று டிரம்ப் புதினிடம் கூறியதாக கூறப்படுகிறது.


