இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'மாமன்'. லார்க் ஸ்டுடியோ சார்பில் கே.குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
அக்காவின் மகனுக்கும், தாய்மாமனுக்கும் இடையே நடைபெறும் பாசப்போராட்டத்தால் குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளை தாண்டி ஒன்று சேரும் குடும்பக் கதை. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் சூரிக்கு பாராட்டுதல்களையும் பெற்றுத்தந்துள்ளது. 'விடுதலை', 'மாமன்' படங்களுக்கு நடிகர் சூரிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளது.
இதனை தொடர்ந்து, நடிகர் சூரி நடித்து வரும் படம் 'மண்டாடி'. இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ இப்படத்தை தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படம் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், நடிகர் சூரி எக்ஸ் தள பக்கத்தில், அடுத்த கவனம் 'மண்டாடி' என்று குறிப்பிட்டு படத்தில் நடித்து வரும் கதாபாத்திரத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைராகி வரும் நிலையில், இப்படம் மீனவர் வாழ்க்கை பாடமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தனது குடும்பத்துடன் நடிகர் சூரி சாமி தரிசனம் செய்தார். அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


