உணவுக்காக திரண்ட மக்கள் மீது துப்பாக்கிசூடு.. 38 பேரை கொன்று குவித்த இஸ்ரேல் ராணுவம்தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவுடன் செயல்படும் உணவு விநியோக மையங்களுக்கு அருகே நேற்று (ஜூன் 16) இஸ்ரேலிய ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 38 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ராஃபா நகரத்திற்கு அருகிலுள்ள காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மையத்தை அடைய முயன்றபோது கொல்லப்பட்டனர் என்றும், சில பேர் அருகிலுள்ள கான் யூனிஸ் நகரின் புறநகரில் புதிதாக திறக்கப்பட்ட மையத்திற்குச் செல்லும் வழியில் சுடப்பட்டதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் வழியாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உணவு மையங்களை அடைய முயற்சிக்கும்போது தினசரி துப்பாக்கிச்சூடுகளில் மக்கள் உயிரிழந்த வண்ணம் உள்ளனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் போர்வையில், அதிகாலை 4 மணியளவில் இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்று ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இஸ்ரேலிய இராணுவம் உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. முன்னதாக நடந்த இதுபோன்ற சம்பவங்களில், தங்கள் நிலைகளை நெருங்கும் சந்தேக நபர்கள் மீது எச்சரிக்கை செய்வதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறியிருந்தது.
இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கை மற்றும் உதவிப் பொருட்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள், காசா பகுதியைப் பஞ்சத்தின் விளிம்பில் தள்ளியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


