அகமதாபாத்தில் இருந்து நேற்று முன்தினம் லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் உள்பட சுமார் 265 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தியா மட்டுமின்றி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த விபத்து தொடர்பாக சர்வதேச தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜி ஜின்பிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சீன அரசு மற்றும் மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், சீன பிரதமர் லீ கியாங்கும் பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.


