இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போரில் காசாவில் 54 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த போர் ஓர் ஆண்டுக்கு மேல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்தப் போரால் காசா முனையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. காசாவுக்கு பல்வேறு நாடுகள் நிவாரண பொருட்கள் அனுப்பி வருகின்றன. இந்த நிவாரண பொருட்களை அமெரிக்க தொண்டு நிறுவனம் காசாவில் விநியோகித்து வருகிறது.
இதற்கிடையே, காசாவின் ரபாவில் நிவாரண பொருட்களை வாங்க ஏராளமான பாலஸ்தீனியர்கள் குவிந்தனர். அப்போது, திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் காயமடைந்த பலர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. மேலும் 70-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக, இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ராணுவ முகாம் அருகே சந்தேகத்துக்கு இடமான நபர்கள் இருந்ததால் அவர்களை நோக்கி தாக்குதல் நடத்தினோம். ஹமாஸ் போராளிகள் வேண்டுமென்றே உதவி விநியோகத்தை சீர்குலைத்ததாகவும் குற்றம் சாட்டியது.


